வங்காளதேசத்தில் வன்செயல்: சுபி முஸ்லிம் தலைவர் சுட்டுக்கொலை


வங்காளதேசத்தில் வன்செயல்: சுபி முஸ்லிம் தலைவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 14 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-15T01:07:13+05:30)

வங்காளதேசத்தில் சிறுபான்மை சுபி முஸ்லிம் பிரிவை சேர்ந்த மதத்தலைவர் பர்ஹத் உசேன் சவுத்திரி சுட்டுக்கொலை.

டாக்கா,

வங்காளதேசத்தில் சன்னி முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சமீப காலமாக சிறுபான்மையினர், வெளிநாட்டினர், மதச்சார்பற்ற வலைப்பதிவாளர்கள், கல்வியாளர்கள் குறி வைத்து கொல்லப்படுகின்றனர். இது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அங்கு தலைநகர் டாக்காவில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தினஜ்பூர் மாவட்டத்தில் போச்சகஞ்ச் என்ற இடத்தில் சிறுபான்மை சுபி முஸ்லிம் பிரிவை சேர்ந்த மதத்தலைவர் பர்ஹத் உசேன் சவுத்திரி (வயது 55) வசித்து வந்தார். நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியுடன் அவரது வீடு புகுந்து, அங்கிருந்த அவரையும், அவரது இளம் பணிப்பெண்ணையும் சரமாரியாக சுட்டு, ரத்த வெள்ளத்தில் வீழ்த்தி விட்டு தப்பிச்சென்றனர். இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம், சிறுபான்மை இன மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி அர்ஜூ முகமது கூறுகையில், “இந்த படுகொலையை நடத்தியது யார் என இன்னும் துப்பு துலங்கவில்லை. விசாரித்து வருகிறோம். அதே நேரத்தில் இதில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்காது என்று கூற முடியாது” என குறிப்பிட்டார். 

Next Story