பல்மைரா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: சிரிய ராணுவம் தகவல்


பல்மைரா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: சிரிய ராணுவம் தகவல்
x
தினத்தந்தி 17 March 2017 10:00 AM GMT (Updated: 2017-03-17T18:08:52+05:30)

பல்மைரா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என்று சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

டமாகஸ்,

புராதன சின்னங்கள் நிறைந்த பல்மைரா பகுதியில் அத்துமீறி சுற்றி திரிந்த இஸ்ரேல் போர் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சிரியா ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக சிரியாவின் செய்தி நிறுவனமான சானா கூறியிருப்பதாவது:- “ லெபனான் பிராந்திய பகுதி வழியாக நான்கு இஸ்ரேல் விமானங்கள் அதிகாலை 2.40 மணியளவில் எங்கள் நாட்டு வான் எல்லைக்குள் நுழைந்தது. பல்மைரா பகுதிக்குள் செல்லும் போது ராணுவ இலக்குகளை தாக்கியும் சென்றது. இதையடுத்து எங்கள் வான் பாதுகாப்பு படைகள் எங்கள் பிராந்தியத்தை ஆக்கிரமிப்பு செய்த போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. மற்றொரு விமானம் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஏனைய விமானங்கள் வான் எல்லையை விட்டு  வெளியேறின” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் தீவிரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில்,சிரியாவில் 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் துவங்கியதில் இருந்து இருநாடுகளுக்கும் இடையே  சச்சரவு நிலவி வருகிறது. 

முன்னதாக சிரியாவின் சில இடங்களில்  தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் பதிலுக்கு சிரியா ஏவுகணை தாக்குதல் நடத்திய போதும்  இலக்குகள் எதையும்  அது தாக்கவில்லை என்று இஸ்ரேல் விமானப்படை தெரிவித்தது. ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருமுறை சென்ற பல்மைரா நகரை சிரிய ராணுவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது நினைவிருக்கலாம்.

Next Story