ஏமனில் பயங்கரம் 31 அகதிகள் கொன்று குவிப்பு


ஏமனில் பயங்கரம் 31 அகதிகள் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 17 March 2017 10:15 PM GMT (Updated: 17 March 2017 8:26 PM GMT)

ஏமனில் படகில் சென்றபோது நடத்தப்பட்ட ஹெலிகாப்டர் தாக்குதலில் 31 சோமாலியா அகதிகள் கொல்லப்பட்டனர்.

கெய்ரோ,

ஏமன், சிரியா, ஈராக், சூடான் உள்ளிட்ட பல நாடுகளில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போருக்கு தப்பி உயிர் பிழைப்பதற்காக அகதிகள் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதே போன்று வறுமையில் சிக்கித்தவித்துக்கொண்டு, ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் பரிதவிக்கிற சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாட்டினரும் அகதிகளாக பிற நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்த அகதிகளில் பலரும் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் படகுகளில் செல்கிறபோது, படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து உயிரிழப்புகள் நேருகின்றன. இதற்கு ஏதுமறியாத அப்பாவி குழந்தைகளும் தப்புவதில்லை. அவர்களின் சோகம் தீராத சோகமாக உள்ளது.

ஹெலிகாப்டர் தாக்குதல்

இந்த நிலையில், நேற்று முன்தினம் சோமாலியா நாட்டை சேர்ந்த அகதிகள் ஒரு படகில் சூடான் நாட்டுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின் படகு, உள்நாட்டுப்போர் நடந்து வருகிற ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஹோடேடா என்ற இடத்தில் அமைந்துள்ள பாப் அல் மான்டேப் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது வானில் வந்த ஒரு ஹெலிகாப்டர், அந்த படகின் மீது குண்டுவீச்சு நடத்தியது. அப்போது அந்தப் படகில் இருந்த அகதிகள் அலறினர். செய்வது அறியாது திகைத்தனர்.

31 பேர் பலி

இந்த தாக்குதலை நடத்தி விட்டு அந்த ஹெலிகாப்டர் மறைந்து விட்டது.

இந்த தாக்குதலில் அப்பாவி அகதிகள் 31 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தப் பகுதிக்கு மீட்புப்படையினர் விரைந்தனர். அவர்கள் படகில் இருந்து 31 அகதிகளின் உடல்களை மீட்டனர். அத்துடன் எஞ்சிய 80 அகதிகளையும் மீட்டனர்.

தாக்குதல் நடத்திய ஹெலிகாப்டர் ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர் என தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தாக்குதல் நடத்தி, அகதிகளை கொன்று குவித்தது யார் என தெரியவில்லை.

ஏமனில் 2015–ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

அதிபர் படைகளுக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபிய கூட்டுப்படைகள் களம் இறங்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில்தான் ஏமனில் அகதிகள் பயணம் செய்த படகில் ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தப்பட்டு, அப்பாவி அகதிகள் 31 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story