பாரீஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கியை பறித்தவர் சுட்டுக்கொலை


பாரீஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கியை பறித்தவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 18 March 2017 10:00 PM GMT (Updated: 2017-03-19T01:23:10+05:30)

பாரீஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கியை பறித்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ். பாரீஸ் நகரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் ஒர்லி விமான நிலையம் உள்ளது.

அந்த விமான நிலையத்தின் தெற்கு முனையத்தில் நேற்று காலை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அவரை நாடிச்சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் அவரிடம் இருந்த துப்பாக்கியை தட்டிப் பறித்து விட்டு ஓட்டம் பிடித்தார். அதைத் தொடர்ந்து அவர் அங்குள்ள ஒரு கடைக்குள் புகுந்தார்.  அதை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் அவரை சுட்டுக்கொன்றனர். சம்பவ இடத்தையும் அவர்கள் சுற்றி வளைத்தனர்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த விமான நிலையம் மூடப்பட்டது. அந்த விமான நிலையத்தில் இருந்த மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு செயலிழப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. துப்பாக்கியை பறித்த நபர், எதற்காக பறித்தார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் அந்த நாட்டின் உள்துறை மந்திரி புருனோ லி ரோக்ஸ், அங்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

இந்த சம்பவம் காரணமாக பாரீஸ் விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Next Story