நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மரணம்; லண்டனில் உயிர் பிரிந்தது


நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மரணம்; லண்டனில் உயிர் பிரிந்தது
x
தினத்தந்தி 19 March 2017 8:35 PM GMT (Updated: 2017-03-20T02:05:30+05:30)

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

லண்டன்,

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன். இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நே‌ஷனல் பட நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து கமல்ஹாசன் நடித்த ராஜபார்வை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் உள்பட பல படங்களை தயாரித்து உள்ளார். கமல்ஹாசனும் அவரது மகள் சுருதிஹாசனும் நடிக்கும் சபாஷ்நாயுடு படத்தை தற்போது தயாரித்து வந்தார்.

சந்திரஹாசன் மனைவி கீதாமணி கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். அதன்பிறகு லண்டன் சென்று அங்கு வசிக்கும் தனது மகள் அனுஹாசன் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு சந்திரஹாசனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

நடிகர் சங்கம் இரங்கல்

சந்திரஹாசன் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

‘‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் கமல்ஹாசனின் இரண்டாவது சகோதரர் சந்திரஹாசன் லண்டனில் உள்ள அவரது மகள் அனுஹாசன் இல்லத்தில் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைந்தோம். பால்ய காலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக உறுதுணையாக, அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்தவர் சந்திரஹாசன்.

எனவேதான் அவரை தனது மூத்த சகோதரர் என்று இல்லாமல் அப்பா என்றே எப்போதும் குறிப்பிடுவார். அப்பேற்பட்ட அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம். அவரது இழப்பால் துக்கத்தில் வாடும் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் நடிகர் சாருஹாசன் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.’’  இவ்வாறு இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story