ராக்கெட் என்ஜின் சோதனை நடத்தி வடகொரியா அதிரடி அமெரிக்காவை தாக்க அணு ஏவுகணை தயாரிக்கும் முயற்சியா?


ராக்கெட் என்ஜின் சோதனை நடத்தி வடகொரியா அதிரடி அமெரிக்காவை தாக்க அணு ஏவுகணை தயாரிக்கும் முயற்சியா?
x
தினத்தந்தி 19 March 2017 8:42 PM GMT (Updated: 2017-03-20T02:12:13+05:30)

வடகொரியா அதிரடியாக ராக்கெட் என்ஜின் சோதனை ஒன்றை நடத்தி உள்ளது. இது அமெரிக்காவை தாக்க அணு ஏவுகணை தயாரிக்கும் முயற்சியின் ஒரு அங்கம் என கூறப்படுகிறது.

சியோல்,

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பு, ஐ.நா. சபை, அமெரிக்கா ஆகியவற்றின் கடுமையான பொருளாதார தடைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

வடகொரியா தொடர்ந்து 4 முறை அணுகுண்டு சோதனை நடத்தி உள்ளது. ஒரு முறை ஹைட்ரஜன் குண்டு சோதனையும் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது. தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் அண்டை நாடான தென்கொரியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் ஆத்திரத்தை உண்டுபண்ணி வருகின்றன.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், கடந்த வெள்ளிக்கிழமை தென்கொரியாவில் நிருபர்களிடம் பேசுகையில், வடகொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். தென்கொரியாவையோ அல்லது அமெரிக்க படைகளையோ வடகொரியா அச்சுறுத்தினால், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்காது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் வடகொரியா இந்த மிரட்டலுக்கு பயந்ததாக தெரியவில்லை.

ராக்கெட் என்ஜின் சோதனை

இந்த நிலையில், வடகொரியா நேற்று உயர் உந்துசக்தி கொண்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்த சோதனை, டோங்சாங் ரி ராக்கெட் ஏவுதளத்தில் வைத்து நடைபெற்றதாக வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்தது.

இது குறித்து அந்த நாட்டின் ஆட்சியாளரான கிம் ஜாங் அன் கூறும்போது, ‘‘வடகொரியா நடத்தியுள்ள ராக்கெட் என்ஜின் சோதனை அடைந்துள்ள வெற்றியானது, ராக்கெட் துறையில் புதிய பிறப்பு ஆகும்’’ என்று குறிப்பிட்டார்.

அணு ஏவுகணை தயாரிக்கும் முயற்சி?

மேலும் அவர் கூறும்போது, ‘‘வடகொரியா சர்வதேச தரம் வாய்ந்த செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் முயற்சியை அடைவதற்கு இந்த என்ஜின் உதவிகரமாக இருக்கும்’’ என்றும் குறிப்பிட்டார்.

இந்த ராக்கெட் என்ஜின் சோதனையை கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா நடத்தியுள்ள ராக்கெட் என்ஜின் சோதனை, அமெரிக்காவை தாக்கும் ஆற்றல் வாய்ந்த அணு ஏவுகணையை தயாரிக்கும் முயற்சியின் ஒரு அங்கம் என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.


Next Story