உலக அளவில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 122-வது இடம்


உலக அளவில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 122-வது இடம்
x
தினத்தந்தி 21 March 2017 3:08 AM GMT (Updated: 2017-03-21T16:55:21+05:30)

உலக அளவில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 122-வது இடம் கிடைத்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஐநா சபை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

நியூயார்க், 

சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஐ.நா.வில் சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் உலக அளவில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.

தனிநபர் வருமானம், சமூக ஆதரவு, ஆரோக்கிய வாழ்வுக்கான எதிர்பார்ப்புகள், வாழ்வின் வாய்ப்புகளை தேர்வு செய்வதற்கான சுதந்திரம், பெருந்தன்மை மற்றும் ஊழல் உணர்வுகள் போன்றவை அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.மொத்தம் 155 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் நார்வே முதலிடம் பெற்று, உலக அளவில் மிகவும் மகிழ்ச்சியான நாடாக கண்டறியப்பட்டு உள்ளது. டென்மார்க்கை பின்னுக்கு தள்ளி நார்வே முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.

இந்த பட்டியலில் இந்தியா 122-வது இடம் பெற்றுள்ளது. கடந்த 2013-15-ம் ஆண்டு வெளியான பட்டியலில் 118-வது இடத்தை பெற்றிருந்த இந்தியா, இந்த முறை 4 இடங்கள் பின்தங்கி இருக்கிறது.இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் சீனா (79), பாகிஸ்தான் (80), நேபாளம் (99), வங்காளதேசம் (110), ஈராக் (117), இலங்கை (120) போன்ற நாடுகள் கூட இந்தியாவை விட முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story