மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மின்னணு பொருட்கள் கொண்டு வர இன்று முதல் தடை


மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மின்னணு பொருட்கள் கொண்டு வர இன்று முதல் தடை
x
தினத்தந்தி 21 March 2017 5:04 AM GMT (Updated: 2017-03-21T10:34:30+05:30)

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மின்னணு பொருட்கள் கொண்டு வர இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்,

குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட  பிற மின்னணு கையடக்க உபகரணங்கள் கொண்டு வர அமெரிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தடை தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. கருத்து கூறவும் மறுத்துவிட்டனர். அதேவேளையில், ராயல் ஜோர்டானியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.  அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும்  இந்த செய்தியை உறுதி படுத்தியுள்ளது. ஜோர்டானியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து தடை தொடர்பான மேற்கண்ட தகவலை நீக்கிவிட்டது. முன்னதாக அந்த டுவிட்டர் பதிவில் மார்ச் 21 ஆம் தேதிக்கு பிறகு சில மின்னணு உபகரணங்களை தங்களுடன் பயணிகள் எடுத்து வர முடியாது என்று தெரிவித்து இருந்தது.

செல்போன்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் எடுத்து வர விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் குறித்து நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டோம் என்றும் தேவைப்படும் நேரத்தில் கருத்துக்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்தது. எகிப்து, ஜோர்டான், குவைத், மோராக்கா, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வரும் இடைநில்லா விமானங்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story