8 நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் விமானங்களுக்கு ‘திடீர்’ உத்தரவு


8 நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் விமானங்களுக்கு ‘திடீர்’ உத்தரவு
x
தினத்தந்தி 21 March 2017 10:30 PM GMT (Updated: 21 March 2017 4:44 PM GMT)

கம்ப்யூட்டர், கேமரா, டி.வி.டி. பிளேயர், ஐபாட், மின்னணு விளையாட்டு சாதனங்கள் எடுத்து வருவதற்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வாஷிங்டன்,

8 மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளின் 10 விமான நிலையங்களில் இருந்து வருகிற விமானங்களில் பயணிகள் தங்களுடன் மடிக்கணினி, டேப்லட் கம்ப்யூட்டர், கேமரா, டி.வி.டி. பிளேயர், ஐபாட், மின்னணு விளையாட்டு சாதனங்கள் எடுத்து வருவதற்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள 8 நாடுகளின் 10 விமான நிலையங்கள் பட்டியலில் அம்மான் (ஜோர்டான்), கெய்ரோ (எகிப்து), இஸ்தான்புல் (துருக்கி), ஜெட்டா (சவுதி அரேபியா), ரியாத் (சவுதி அரேபியா) குவைத் சர்வதேச விமான நிலையம், கசபிளாங்கா (மொராக்கோ), தோஹா (கத்தார்), துபாய் இன்டர்நே‌ஷனல் (ஐக்கிய அரபு அமீரகம்) அபுதாபி (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியவை இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட உளவுத்தகவல்கள் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் பயணிகள் தங்கள் பெட்டிகளில் மின்னணு சாதனங்களை வைத்து, சரக்கு பெட்டகத்தில் போட்டு எடுத்து வரலாம்.

கடந்த ஜனவரி மாதம் துபாயை சேர்ந்த தாலோ நிறுவனத்தின் விமானம், சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் குண்டுவெடிப்பால் சேதமுற்றது. இதில் ஒருவர் விமானத்தில் இருந்து வெளியே வீசியெறியப்பட்டு பலியானார். விமானி சாதுரியமாக விமானத்தை அதிரடியாக தரை இறக்கினார். ‘மடிக்கணினி குண்டு’ இதில் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த சம்பவத்துக்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல் ‌ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான் இப்போது 8 நாடுகளின் 10 விமான நிலையங்களில் இருந்து அமெரிக்கா வரும் விமானங்களில் மின்னணு சாதனங்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story