இங்கிலாந்து பாராளுமன்றத்துக்குள் நுழைய முயன்றவன் சுட்டுக்கொலை ஒரு பெண் பலி; பலர் காயம்


இங்கிலாந்து பாராளுமன்றத்துக்குள் நுழைய முயன்றவன் சுட்டுக்கொலை ஒரு பெண் பலி; பலர் காயம்
x
தினத்தந்தி 23 March 2017 12:35 AM GMT (Updated: 2017-03-23T06:05:04+05:30)

போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்தி விட்டு இங்கிலாந்து பாராளுமன்றத்துக்குள் நுழைய முயன்றவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இச்சம்பவத்தில் ஒரு பெண் பலியானார். பலர் காயம் அடைந்தனர்.

லண்டன்,

இங்கிலாந்து பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாராளுமன்ற வளாகம் அருகே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில், வழக்கம்போல் பொதுமக்கள் நடந்தும், சைக்கிளிலும் சென்று கொண்டிருந்தனர்.

இங்கிலாந்து நேரப்படி, பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு, ஒரு கார் அதிவேகத்தில் வந்து பொதுமக்கள் மீது மோதியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கீழே விழுந்தனர். ஒரு பெண் பலியானார். பீதியில், பொதுமக்கள் சுமார் 50 பேர், பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி ஓடினர்.

கத்திக்குத்து

அதே சமயத்தில், நடுத்தர வயதுடைய ஒருவன், கையில் 7 அங்குல நீள கத்தியை வைத்துக்கொண்டு, பாராளுமன்ற முக்கிய நுழைவாயில் நோக்கி ஓடி வந்தான். அவனை ஒரு போலீஸ் அதிகாரி தடுக்க முயன்றார். அவரை அவன் கத்தியால் குத்தி விட்டு, பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தான்.

அதற்குள் மற்ற போலீஸ் அதிகாரிகள் சுதாரித்துக்கொண்டு, அவனை துப்பாக்கியால் சுட்டனர். அவன் தரையில் சுருண்டு விழுந்தான். அவன் மீது துணி போர்த்தப்பட்டு இருந்தது. எனவே, அவன் இறந்து விட்டதாக தெரிகிறது.

பாராளுமன்றம் மூடப்பட்டது

பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள் இந்த துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, சபாநாயகர் டேவிட் லிடிங்டன், ஒரு போலீஸ் அதிகாரி கத்தியால் குத்தப்பட்டதையும், மர்ம நபர் சுடப்பட்டதையும் எம்.பி.க்களிடம் தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பாராளுமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டன. மறுஅறிவிப்பு வரும் வரை, எம்.பி.க்கள் வெளியே செல்ல முயற்சிக்காமல், உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். வேறு மர்ம நபர்கள் பதுங்கி இருக்கிறார்களா என்பதை கண்டறிய பாராளுமன்ற கட்டிடத்தின் ஒவ்வொரு அறையாக போலீசார் சோதனை நடத்தினர்.

பிரதமர் உயிர் தப்பினார்

இந்த சம்பவத்தின்போது, பிரதமர் தெரசா மேயும் பாராளுமன்றத்தில்தான் இருந்தார். அவரை ஆயுதம் தாங்கிய போலீசார், அரண் போல சுற்றி நின்று அவசர அவசரமாக அவரது காருக்கு அழைத்து சென்றனர். அவரை பின் இருக்கையில் அமர வைத்து, பாதுகாப்பான ரகசிய இடத்துக்கு கூட்டி சென்றனர்.

பிரதமர் பத்திரமாக இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பயங்கரவாத தாக்குதல்

இதற்கிடையே, இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாராளுமன்ற வளாகம் அருகே ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் வெடித்தன. துப்பாக்கியால் சுடும் சத்தங்களும் கேட்டன.

பாராளுமன்றம் அருகே நடந்த சம்பவம், ‘பயங்கரவாத தாக்குதல்’தான் என்று போலீசார் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்கள், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். லண்டன் நகரம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. பொதுமக்கள், வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Next Story