பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது: இங்கிலாந்து பாராளுமன்ற தாக்குதலில் 7 பேர் கைது


பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது: இங்கிலாந்து பாராளுமன்ற தாக்குதலில் 7 பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-23T23:07:39+05:30)

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற கட்டிடம், லண்டன் நகரில் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே உள்ளது. அந்த பாலத்தில் நேற்று முன்தினம் ஒரு பயங்கரவாதி காரை அதிவேகமாக ஓட்டிச்சென்று மக்கள்மீது சரமாரியாக மோதித் தள்ளினார். சினிமாவில் வரும் சம்பவம் போல நடந்த இந்த சம்பவத்தால் நிலைகுலைந்த மக்கள் பீதியில் பாராளுமன்றத்தை நோக்கி ஓடினர். அதைத் தொடர்ந்து கார், தடுப்புச்சுவரில் மோதி நின்றது.

சுட்டுக்கொலை 

அதைத் தொடர்ந்து அந்த பயங்கரவாதி, பாராளுமன்ற நுழைவாயிலை நோக்கி கையில் கத்தியுடன் ஓடி வந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்த முயற்சித்தார். அவரை, அவர் கத்தியால் குத்தி விட்டு மேலும் முன்னேறினார்.

பாராளுமன்ற வளாகத்தில் அவர் அத்துமீறி நுழைந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரிகள் அவரை சுட்டுக்கொன்றனர்.

பெண் பலி 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாராளுமன்ற நடவடிக்கைகள் அவசரமாக முடிக்கப்பட்டன. பிரதமர் தெரசா மே அவசரமாக பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ஒரு பெண் பலியானார். 30–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலி 4 ஆக உயர்வு 

இந்த சம்பவத்தில் ஏற்கனவே ஒரு பெண்ணும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதியும் பலியான நிலையில் 50 வயது கடந்த ஒரு ஆணும், கத்திக்குத்துக்கு ஆளான போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தனர். எனவே பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வருகிறவர்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்குதலின் பின்னணி என்ன? 

இந்த தாக்குதல் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு துணை போலீஸ் கமி‌ஷனர் பொறுப்பு வகிக்கும் பயங்கரவாத தடுப்பு போலீஸ் படை தலைவர் மார்க் ராவ்லே, லண்டன் நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்த தாக்குதலில் விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. தாக்குதல் நடத்தியவர் யார் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஏனென்றால் தாக்குதல் நடத்தியதின் முழுமையான பின்னணி என்ன, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பது பற்றி விசாரித்து அறிய வேண்டி இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

மேலும், ‘‘பர்மிங்ஹாம், லண்டன் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தொடர்ந்து புலன் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் இந்த தாக்குதல் நடத்திய நபர், தனியாகத்தான் செயல்பட்டுள்ளார்; அவர் சர்வதேச பயங்கரவாதத்தால் கவரப்பட்டுத்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது எங்களது நம்பிக்கை’’ என்று கூறினார்.

7 பேர் கைது 

இந்த தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்றாலும் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் தெரசா மே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பாராளுமன்ற தாக்குதலையொட்டி, ஆஸ்திரேலிய நாட்டு பாராளுமன்ற வளாகத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story