அமெரிக்காவில் இந்திய பெண் என்ஜினீயர், மகனுடன் படுகொலை


அமெரிக்காவில் இந்திய பெண்  என்ஜினீயர், மகனுடன் படுகொலை
x
தினத்தந்தி 24 March 2017 12:28 PM GMT (Updated: 24 March 2017 12:28 PM GMT)

அமெரிக்க நாட்டில் ஆந்திர பெண் என்ஜினீயரும், அவரது 7 வயது மகனும் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் அவர்களது சொந்த ஊர் சோகத்தில் மூழ்கியது.

நெவார்க்,

அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் ஹனுமந்தராவ்- சசிகலா (வயது 40) தம்பதியர். இவர்களுடைய பூர்வீகம், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஆகும். இந்த தம்பதியருக்கு அனிஷ் சாய் என்று 7 வயதில் ஒரு ஆண் குழந்தை.

ஹனுமந்தராவ், சசிகலா இருவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள். ஹனுமந்தராவ் அலுவலகம் சென்று வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சசிகலாவோ வீட்டில் இருந்தே அலுவலக வேலையை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் ஹனுமந்தராவ் நேற்று வேலைக்கு போய் விட்டு வீட்டுக்கு திரும்பினார். ஆனால் அவர் வீட்டில் தனக்காக காத்திருக்கும் மனைவியையும், மகனையும் சந்திக்க ஆசை, ஆசையாக வந்தால், அங்கு அவர்கள் இருவரும் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டு பிணமாகக்கிடந்ததைத்தான் காண முடிந்தது.அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த இரட்டைக்கொலையின் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை. இது இனவெறி தாக்குதலில் நடந்த கொலையா, கொள்ளை முயற்சியில் நடந்த கொலையா அல்லது பாலியல் வன்முறையில் நடத்தப்பட்ட படுகொலையா என்பது இனிதான் தெரிய வரும்.

இந்தப் படுகொலை குறித்து ஹனுமந்தராவ், பிரகாசம் மாவட்டம், பர்சூர் அருகே திம்மராஜூபாலம் கிராமத்தில் உள்ள தனது தந்தை சுப்பாராவுக்கு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த தகவல் ஊர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

இது அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுப்பாராவ் வீட்டுக்கு உறவினர்களும், நண்பர்களும் குவிந்தவண்ணமாக உள்ளனர்.ஹனுமந்தராவ்-சசிகலா தம்பதியர் அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இதுவரை அவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை என்று சுப்பாராவ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன், சசிகலா, அனிஷ் சாய் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பர்சூர் தொகுதி எம்.எல்.ஏ., சாம்பசிவராவ், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் ’டானா’ என்னும் வட அமெரிக்க தெலுங்கு சங்கத்தை வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவில் இந்திய என்ஜினீயர் சீனிவாசும், வர்த்தகர் ஹர்னிஷ் பட்டேலும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், இப்போது கம்ப்யூட்டர் என்ஜினீயர் சசிகலாவும், அவரது மகன் அனிஷ் சாயும் தங்களது வீட்டிலேயே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம், இந்திய பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று எதிரொலித்தது. மேல்-சபையில் கேள்வி நேரத்தின்போது இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் எம்.பி., டி. சுப்பராமி ரெட்டி எழுப்பினார். மக்களவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி., சுப்பாரெட்டி பிரச்சினை எழுப்பினார். இந்த பிரச்சினை தொடர்பாக மேல்சபை துணைத்தலைவர் பி.ஜே. குரியன் அதிர்ச்சி வெளியிட்டார். இந்த துயர சம்பவம் தொடர்பாக உயர்மட்ட அளவில் எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


Next Story