ராணுவ தாக்குதலில் கொலம்பியா புரட்சிப்படை தலைவர் பலி


ராணுவ தாக்குதலில் கொலம்பியா புரட்சிப்படை தலைவர் பலி
x
தினத்தந்தி 24 March 2017 8:30 PM GMT (Updated: 2017-03-24T22:51:30+05:30)

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று கொலம்பியா. அங்கு பல்வேறு புரட்சிப்படை குழுக்கள் இயங்கி வந்தன.

போகோடோ,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று கொலம்பியா. அங்கு பல்வேறு புரட்சிப்படை குழுக்கள் இயங்கி வந்தன. இந்த குழுக்கள் 1964–ம் ஆண்டு இயங்கத் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். 60 ஆயிரம்பேர் காணாமல் போய் விட்டனர். 69 லட்சம் பேர் இடம் பெயர்ந்து விட்டனர்.

இந்தநிலையில்தான் அங்கு இயங்கி வந்த மிகப்பெரிய குழுவான கொலம்பியா புரட்சிகர ஆயுதப்படையுடன் அதிபர் ஜுவான் மேனுவல் சாண்டோஸ் தலைமையிலான அரசு நீண்டதொரு பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த ஆண்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆயுதக்கைவிடல் ஒப்பந்தம் மேற்கொள்ள வைத்தது.

இதேபோன்று அங்கு இயங்கி வருகிற இ.எல்.என். என்றழைக்கப்படுகிற தேசிய விடுதலை முன்னணி என்ற புரட்சிப்படையுடன் கொலம்பிய அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஆயுதத்தை கைவிட வைத்து விட வேண்டும் என்று பெருமுயற்சியில் ஈடுபட்டு வந்தது. ஆனால் அந்த முயற்சி கனியவில்லை.

இந்த நிலையில் அந்த இயக்கத்தின் தலைவரான அல்வாரோ கெல்விஸ் ஆர்டேகா என்ற ஜெய்ரோவை கொலம்பிய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி கொன்று விட்டது.

இது குறித்து அதிபர் ஜுன் மேனுவல் சாண்டோஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இ.எல்.என். படையின் தலைவர் அல்வாரோ கெல்விஸ் ஆர்டேகா என்ற ஜெய்ரோவை கொன்று விட்டதற்காக ராணுவத்தை பாராட்டுகிறேன்’’ என கூறி உள்ளார்.

இந்த தாக்குதல் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் கொலம்பிய அரசுக்கு இது நிம்மதியை அளிப்பதாக அமைந்துள்ளது.


Next Story