காங்கோ நாட்டில் பயங்கரம் 40 போலீஸ் அதிகாரிகள் தலை துண்டிப்பு


காங்கோ நாட்டில் பயங்கரம் 40 போலீஸ் அதிகாரிகள் தலை துண்டிப்பு
x
தினத்தந்தி 26 March 2017 7:45 PM GMT (Updated: 26 March 2017 7:14 PM GMT)

ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் கசாய் மாகாணத்தில் ‘காம்வினா நசபு’ என்ற கிளர்ச்சியாளர்கள் குழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கின்சாஷா

ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் கசாய் மாகாணத்தில் ‘காம்வினா நசபு’ என்ற கிளர்ச்சியாளர்கள் குழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்தக் குழுவின் தலைவர் ஜீன் பியர்ரே பண்டியை பாதுகாப்பு படைகள் கொன்று விட்டன. அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்த மோதல்களில் இதுவரை 400 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 லட்சம்பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா. சபை புள்ளி விவரம் கூறுகிறது. இந்த நிலையில், அங்கு போலீஸ் வாகனத்தை ‘காம்வினா நசபு’ கிளர்ச்சியாளர்கள் குழு தாக்கி, அதில் இருந்த போலீஸ் அதிகாரிகளைப் பிடித்தது.

அவர்களில் 40 பேரை தலையைத் துண்டித்து கிளர்ச்சியாளர்கள் கொன்று விட்டனர். உள்ளூர்மொழி பேசிய 6 போலீசாரை மட்டும் கொல்லாமல் விடுவித்து விட்டனர். இந்த தகவல்களை கசாய் சட்டசபை தலைவர் பிராங்கோயிஸ் கலம்பா தெரிவித்தார்.

இது குறித்து மாகாண கவர்னர் அலெக்சிஸ் நகண்டே மியபோம்பா கூறும்போது, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காங்கோவில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த மோதல் நடைபெற்றிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story