பாகிஸ்தானின் வஸ்ரிஸ்தான் பகுதிக்கு முதல்முறையாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் குழு சென்றது


பாகிஸ்தானின் வஸ்ரிஸ்தான் பகுதிக்கு முதல்முறையாக  ரஷ்ய ராணுவ அதிகாரிகள் குழு சென்றது
x
தினத்தந்தி 31 March 2017 9:31 AM GMT (Updated: 31 March 2017 9:31 AM GMT)

பாகிஸ்தானின் வஸ்ரிஸ்தான் பகுதிக்கு முதல்முறையாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் குழு சென்று பார்வையிட்டது.

இஸ்லமபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மலைப்பிரதேச இடமான வஸ்ரிஸ்தான் பகுதியில், பழங்குடியினர்கள் வசிக்கும் இடம் முதல் ஆப்கான் எல்லைப்பகுதிகள் வரை  ரஷ்ய ராணுவ அதிகாரிகளின் உயர்மட்டக்குழு சென்று பார்வையிட்டது.

வடக்கு வஸ்ரிஸ்தான் ஏஜென்சியில் உள்ள மிரான்ஷா மற்றும் தெற்கு வஸ்ரிஸ்தானில் உள்ள வனா ஆகிய பகுதிகளுக்கு அதிகாரிகள் குழு சென்றது. ரஷ்ய ராணுவத்தின் உயர்மட்ட குழு வஸ்ரிஸ்தான் பகுதிக்கு செல்வது இதுதான் முதல் தடவையாகும்.  பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் ஒருகட்டத்தில் இருந்த வஸ்ரிஸ்தான் பகுதியின் தற்போதைய நிலை பற்றி நேரடி தகவல்களை பெறுவதற்காக ரஷ்ய குழு வருகை தந்ததாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பனிப்போர் காலத்தில் இருந்து பாகிஸ்தானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக அவநம்பிக்கையும் பகைமையும் நீடித்து வந்தது. இந்த நிலையில் அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பட்டு வரும் நிலையில், ரஷ்ய ராணுவ அதிகாரிகளின் இந்த பயணமானது அமைந்துள்ளது.  கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல் முறையாக பாகிஸ்தானுடன் இணைந்து ரஷ்ய ராணுவ பயிற்சியை மேற்கொண்டது. அதேபோல், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களையும் விற்க தொடங்கியது.

வஸ்ரிஸ்தானில் உள்ள பழங்குடியின நிர்வாக பகுதிகளை  பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்ட விதம் குறித்து ரஷ்ய  ராணுவத்திடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் எடுத்துரைத்ததாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் சாதனையையும் பிராந்தியத்தில் நிலைத்தன்மை கொண்டு வர எடுத்த முயற்சிகளுக்காகவும் பாகிஸ்தான் ராணுவத்தை ரஷ்ய ராணுவம் பாராட்டியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story