வெடிகுண்டு தாக்குதலில் 45 பேர் பலி: எகிப்து நாட்டில் அவசர நிலை பிரகடனம்


வெடிகுண்டு தாக்குதலில் 45 பேர் பலி: எகிப்து நாட்டில் அவசர நிலை பிரகடனம்
x
தினத்தந்தி 10 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-11T00:47:14+05:30)

எகிப்தின் சிறுபான்மை இனத்தவரான காப்டிக் கிறிஸ்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய இந்த 2 தாக்குதல்களும் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

கெய்ரோ,

எகிப்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 45 பேர் பலியானதைத் தொடர்ந்து அவரச நிலையை அந்நாட்டின் அதிபர் அல் சிசி அறிவித்தார்.

45 பேர் பலி

எகிப்து நாட்டின் நைல் டெல்டா பகுதியில் உள்ளது, டாண்டா நகரம். இங்குள்ள காப்டிக் கிறிஸ்தவ தேவலாயத்தில் நேற்று முன்தினம் காலை குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் அந்நாட்டின் அலெக்சாண்டிரியா நகரில் உள்ள காப்டிக் கிறிஸ்தவ தேவாலயத்தில், நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 18 பேர் உயிர் இழந்தனர். 50–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதிபர் ஆலோசனை

எகிப்தின் சிறுபான்மை இனத்தவரான காப்டிக் கிறிஸ்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய இந்த 2 தாக்குதல்களும் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி உடனடியாக தேசிய ராணுவ கவுன்சில் கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் அந்நாட்டின் பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், ராணுவ மந்திரி, முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக உயர் அதிகாரம் கொண்ட ஒரு கவுன்சிலை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

அவசர நிலை பிரகடனம்

இதைத்தொடர்ந்து அதிபர் அல் சிசி டெலிவி‌ஷனில் தோன்றி நாட்டு மக்களுக்கு சிறிது நேரம் உரையாற்றினார். அப்போது நாட்டில் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப்படுவதாக அவர் அறிவித்தார். தனது முடிவுக்கு மக்கள் ஆதரவு தரும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் எகிப்து நாட்டில் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது எகிப்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கான இறுதிச் சடங்குகள் நேற்று நடந்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா கண்டனம்

பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா விடுத்துள்ள அறிவிக்கையில், ‘‘அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கொடூரமான செயல். பயங்கரவாதத்தை தோற்கடிக்க எகிப்து அரசாங்கத்துக்கு எப்போதும் அமெரிக்கா உறுதியாக தனது ஆதரவை அளிக்கும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.  

இந்த 2 தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது.

எகிப்தில் 2013–ம் ஆண்டு முதல் பயங்கரவாதிகள் சிறுபான்மையின கிறிஸ்தவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story