அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தில்லுமுல்லு: ரஷியாவை சேர்ந்தவர் ஸ்பெயினில் கைது


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தில்லுமுல்லு: ரஷியாவை சேர்ந்தவர் ஸ்பெயினில் கைது
x
தினத்தந்தி 10 April 2017 9:45 PM GMT (Updated: 10 April 2017 7:22 PM GMT)

அமெரிக்க தேர்தல் தொடர்பான தகவல்களை கம்ப்யூட்டர் தொழில் நுட்ப உதவியுடன் திருடியதாக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மாட்ரிட்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்பிற்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் தொடர்பான கம்ப்யூட்டர் தகவல்களை ரஷியா கைப்பற்றி சதிவேலையில் ஈடுபட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க தேர்தல் தொடர்பான தகவல்களை கம்ப்யூட்டர் தொழில் நுட்ப உதவியுடன் திருடியதாக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த 36 வயதான அவருடைய பெயர் பீட்டர் லெவசோவ் என்பதாகும். மனைவியுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவரை ஸ்பெயின் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரை விசாரணைக்காக தங்கள் நாட்டுக்கு நாடு கடத்தும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டு உள்ளது. இதுபற்றி ஸ்பெயினின் தேசிய கிரிமினல் கோர்ட்டு பரிசீலிக்கும் என்று ஸ்பெயின் அரசு பதில் அளித்து இருக்கிறது.

Next Story