அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
x
தினத்தந்தி 11 April 2017 5:41 AM GMT (Updated: 2017-04-11T11:10:49+05:30)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டத்தில் ஆசிரியை உட்பட 3 பேர் பலியாகினர்.

சான் பெர்னாட்டினோ,

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் தொடக்கப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளி கூடத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கு பணியில் இருந்த ஆசிரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் உயிரிழந்தார். மேலும் பள்ளியில் பயின்ற ஒரு 8 வயதான மாணவன் ஒருவனும் கொல்லப்பட்டான். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியை, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை என்று போலீசார் கருதுகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மேலும் ஒரு மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்குள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015 - ஆம் ஆண்டு டிசம்பரில், சான் பெர்னார்டினோ நகரில் உள்ள ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை மையமொன்றில் நுழைந்த ஒரு தம்பதியர், அங்கிருந்த சுகாதார பணியாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போது 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் 21 பேர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

Next Story