ரஷியா மீது பொருளாதார தடை என்ற பிரிட்டன் கோரிக்கையை ஜி7 நாடுகள் நிராகரித்தன


ரஷியா மீது பொருளாதார தடை என்ற பிரிட்டன் கோரிக்கையை ஜி7 நாடுகள் நிராகரித்தன
x
தினத்தந்தி 11 April 2017 2:22 PM GMT (Updated: 11 April 2017 2:21 PM GMT)

ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற பிரிட்டன் கோரிக்கையை ஜி-7 நாடுகள் நிராகரித்து உள்ளன.

லண்டன்,

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தின்கீழ் உள்ள இத்லிப் மாகாணத்தில், கான் ஷேக்குன் நகரில் கடந்த 4–ந் தேதி போர் விமானங்கள் வி‌ஷ வாயு தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தைகள் உள்பட 80–க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகையே ஒரு சேர உலுக்கியுள்ள இந்த தாக்குதலை சிரியா அதிபர் பஷார் ஆல் ஆசாத் படைகள்தான் நடத்தியதாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் உறுதி செய்தன. மேற்கு ஹாம்ஸ் மாகாணத்தில் உள்ள ‌ஷராத் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானங்கள்தான் ஈவிரக்கமின்றி வி‌ஷ வாயு தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கருதுகிறது.

இந்த நிலையில், சிரியா படைகள் நடத்திய வி‌ஷ வாயு தாக்குதலுக்கு சரியான பதிலடி தருகிற விதத்தில், அமெரிக்கா சற்றும் எதிர்பாராத வகையில், ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை உலக நாடுகள் பலவும் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் ரஷியா, ஈரான் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மாறாக விஷவாயு தாக்குதல் விவகாரத்தில் ரஷியா தன் மீது உள்ள குற்றச்சாட்டை மறுத்துவிட்டது, இது தொடர்பாக ஐ.நா. சர்வதேச சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும் என கூறியது. சிரியாவில் உள்ள ஆசாத் அரசும் கிளர்ச்சியாளர்கள் மீதே குற்றம் சாட்டுகிறது. ஆனால் சிரியா மற்றும் ரஷியா மீதே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஆசாத்திற்கு ஆதரவு கொடுப்பதை ரஷியா நிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற வலியுறுத்தல் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரஷியா அதனை கண்டு கொள்வது கிடையாது.

இதற்கிடையே விஷவாயு தாக்குதலை அடுத்து ரஷியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுற்கு எதிராக பொருளாதார தடையை கொண்டுவர பிரிட்டன் அழைப்பு விடுத்தது. ஆனால் பிரிட்டனின் கோரிக்கையை ஜி7 நாடுகள் என்றழைக்கப்படுகிற பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நிராகரித்துவிட்டன என பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது. இத்தாலி நாட்டு வெளியுறத்துறை மந்திரி பேசுகையில் ஜி7 நாடுகள் ரஷியாவை கட்டம் கட்டுவதற்கு துணை நிற்காது மாறாக பேச்சுவார்த்தைக்கு தயராகி வருகின்றது என்று கூறிஉள்ளார். 

Next Story