அமெரிக்கா குண்டு வீச்சு: எங்களுக்கு ஒரு அழிவும் கிடையாது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம்


அமெரிக்கா குண்டு வீச்சு: எங்களுக்கு ஒரு அழிவும் கிடையாது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம்
x
தினத்தந்தி 14 April 2017 3:33 PM GMT (Updated: 2017-04-14T21:02:50+05:30)

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா குண்டு வீசியதில் எங்களுக்கு ஒரு அழிவும் கிடையாது என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

கெய்ரோ,

 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானம் 10 டன் எடைகொண்ட சக்திவாய்ந்த வெடிகுண்டை ஐ.எஸ். பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி தாக்குதல் நடத்தியது. எம்.சி.-130 ரக சரக்கு விமானம் மூலம் 9,797 கிலோ எடைகொண்ட ஜி.பி.யூ-43 ரக வெடிகுண்டு எடுத்துச் செல்லப்பட்டு பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வீசப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 36 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தவிர அந்த பகுதி பயங்கரவாதிகள் எப்போதும் பயன்படுத்த முடியாத அளவிற்கு நிர்மூலம் ஆனது. 

முன்னதாக 10 டன் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், எங்கள் திட்டம் துல்லியமாக இருந்தது. மிக மிக வெற்றிகரமான முறையில் அமைந்தது என்றார். அமெரிக்கா சக்திவாய்ந்த வெடிகுண்டை பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பயன்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும். இந்த வெடிகுண்டின் அடுத்த நிலைதான் அணுகுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா குண்டு வீசியதில் எங்களுக்கு ஒரு அழிவும் கிடையாது என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் நங்கார்ஹரில் அமெரிக்கா வீசிய குண்டு வீச்சில் ஐ.எஸ். இயக்கத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை, காயமும் அடையவில்லை என்று அந்த இயக்கம் செய்தி வெளியிட்டு வருகிறது என ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தின் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்கும் சர்வதேச உளவுப்பிரிவுகள் தெரிவித்து உள்ளன. 


Next Story