ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சக்திவாய்ந்த குண்டு வீசி தாக்குதல் 100 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி


ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சக்திவாய்ந்த குண்டு  வீசி தாக்குதல் 100 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 15 April 2017 7:14 AM GMT (Updated: 2017-04-15T12:43:56+05:30)

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பதுங்கும் இடத்தை குறிவைத்து நேற்றுமுன்தினம் மாலை அமெரிக்கா அதிக சக்திவாய்ந்த குண்டு ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.


ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள சுரங்கப்பாதை மீது ஜிபியு - 43பி எனப்படும் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத பேரழிவு ஏற்படுத்தும் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

அனைத்து குண்டுகளின் தாய் என கருதப்படும் இந்த வெடிகுண்டு மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நடத்தப்படும் முதல் போர்முறை தாக்குதல் இது என்று பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்க ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கையை அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியிருந்தார். அமெரிக்க ராணுவத்தை எண்ணி பெருமை அடைவதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். அமெரிக்க செனட் உறுப்பினர்களும் டிரம்பின் நடவடிக்கையை பாராட்டினர். ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு இது ஒரு தெளிவான தகவலை அனுப்பியிருக்கும் என்று செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பலியான தீவிரவாதிகள் எண்ணிக்கை குறித்த விவரம் தற்போது வெளியே வந்துள்ளது. ஆப்கனின், அச்சின் மாவட்ட கவர்னர் இஸ்மாயில் ஷின்வாரி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இத்தாக்குதலில் 92 தீவிரவாதிகள் இறந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த தாக்குதலில் ராணுவம், காவல்துறையை சேர்ந்தவர்கள் இறக்கவில்லை என்றும் இஸ்மாயில் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக சுமார் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, இத்தாக்குதலை வரவேற்றுள்ள போதிலும், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள், இந்த தாக்குதலை எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது. ஆப்கனில் குட்டி பகுதியை மட்டுமே தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்திருந்ததாகவும், அதற்காக அமெரிக்கா தனது குண்டை போட்டு சோதிக்கும் இடமாக ஆப்கனை மாற்றியதை ஏற்க முடியாது என்று அந்த அதிகாரிகள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

விமானத்திலிருந்து குகை குறி வைக்கப்படும் காட்சி, அது வீசப்படும் காட்சி, வெடித்து சிதறியதும், ஒரு புகை மூட்டம் மேலே எழும் காட்சி ஆகியவற்றை அமெரிக்க பாதுகாப்பு துறை வீடியோவாக வெளியிட்டுள்ளது.


Next Story