அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி


அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 April 2017 10:00 PM GMT (Updated: 2017-04-16T00:22:01+05:30)

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் வடக்கு டுஸ்கான் நகரில் லா என்கேன்டடா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.

அப்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியபோது ஒரு தரப்பினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின்போது ஒரு பெண் படுகாயம் அடைந்தார். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்து சம்பவ பகுதியை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.

 இந்த துப்பாக்கிச்சூடு பற்றி பிமா கவுண்டி ஷெரீப்பின் செய்தி தொடர்பாளர் கோடி கிரெஸ் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘லா என்கேன்டடா வணிக வளாகத்தில் உள்ள பயர்பேர்ட்ஸ் ஓட்டலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண்ணின் காலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவர் உள்ளூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நடந்த தகராறின் பின்னணி என்ன, துப்பாக்கியால் சுடும் அளவுக்கு நிலைமை போனது ஏன் என்பது குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை’’ என கூறினார்.

Next Story