கணினித்துறை முன்னோடி ராபர்ட் டைலர் 85 வயதில் மரணம்


கணினித்துறை முன்னோடி ராபர்ட் டைலர் 85 வயதில் மரணம்
x
தினத்தந்தி 15 April 2017 11:29 PM GMT (Updated: 15 April 2017 11:28 PM GMT)

கணினித் துறையில் நவீன கணினியையும், இண்டெர்நெட் எனப்படும் வலையமைப்பையும் கண்டறிவதில் முன்னோடியான ராபர்ட் டைலர் தனது 85 ஆம் வயதில் மரணமடைந்தார்.

சான் பிராசிஸ்கோ

கணினித் துறையில் நவீன கணினியையும், இண்டெர்நெட் எனப்படும் வலையமைப்பையும் கண்டறிவதில் முன்னோடியான ராபர்ட் டைலர் தனது 85 ஆம் வயதில் மரணமடைந்தார். 

டைலர் 1961 ஆம் ஆண்டில் நாசாவில் பணியாற்றிய போது நவீன கணினி மவுசை கண்டு பிடிப்பதில் ஈடுபட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் பெண்டகனில் (அமெரிக்க இராணுவத் தலைமையகம்) பணியாற்றும் போது ஒரு தனித்த கணினியின் மூலம் வலைப்பின்னலை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். இதன் மூலம் அமெரிக்கா முழுவதுமிலிருந்து பெண்டகனிடம் தொடர்புள்ள நிறுவனங்களை இணைக்கும்படியான ஏற்பாடு செய்யப்பட்டது. இதிலிருந்து முன்னோடி கணினி வலையமைப்பான அர்பாநெட் பிறந்தது. பின்னர் அது இண்டெர்நெட்டாக மலர்ந்தது. ஒற்றை கணினியில் மக்கள் உலகில் அனைத்தையும் ஒரு விரலைக் கொண்டு அடைய முடியும் என்ற வசதி இண்டெநெட்டின் மூலமே சாத்தியம் என்பதை டைலர் முடிவு செய்திருந்தார்.

சிறிது வருடங்கள் கழித்து சிராக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் போது டைலரின் மேற்பார்வையில் கணினிகளின் முன்னோடியான அல்டோவை கண்டுபிடித்தனர். ஒரு அறையை முழுவதுமாக அடைத்து கொண்டிருக்கும் கணினியைவிட தனிப்பட்ட ஒருவருக்குமான கணினியை வழங்க அல்டோ வழி செய்தது. தற்போது விண்டோசில் காணப்படும் ஐகான்ஸ், விண்டோஸ் மற்றும் மெனுக்களைப் போலவே அல்டோவிலும் வசதியாக கணினியை பயன்படுத்த வழி செய்யப்பட்டது. பின்னாளில் மைக்ரோசாஃப்ட்டும், ஆப்பிளும் இதையே பின்பற்றின. 

டைலரின் அணி சிலகாலம் கழித்து மைக்ரோசாஃப்ட் வேர்ட் எனப்படும் மென்பொருளின் முன்னோடியான எதர்நெட்டை உருவாக்கியது. ”எப்படிப்பார்த்தாலும் டைலர் இண்டெர்நெட், பெர்சனல் கம்ப்யூட்டர் ஆகிய இரண்டு புரட்சிகளையும் ஏற்படுத்தி, இன்றைய நவீன உலகினை உருவாக்கிய முக்கிய சிற்பியாக விளங்குகிறார் என்கிறார் கணினி வரலாற்றினை தொகுக்கும் ஆய்வாளர் ஒருவர். 1990 ஆம் ஆண்டுகளில் டைலரின் நிர்வாகத்தின் கீழ் ஆல்டோ விஸ்டா எனப்படும் இணையதள தேடு பொறி (செர்ச் இஞ்சின்) ஏற்படுத்தப்பட்டது. முதன் முறையாக ஏற்படுத்தப்பட்ட தேடு பொறிகளில் இதுவும் ஒன்றாகும்.

1996 ஆம் ஆண்டில் டைலர் ஓய்வு பெற்றார். 1999 ஆம் ஆண்டில் அவருக்கு அறிவியல் கண்டுபிடிப்பிற்கான தேசிய பதக்கம் வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் முதல் செயல்படும் பெர்சனல் கம்ப்யூட்டரை உருவாக்கியதற்காக நேஷனல் அகாடெமி ஆஃப் எஞ்சினியரிங் வழங்கும் டிரேபர் விருதினை டைலருக்கும் அவரது குழுவினருக்கும் வழங்கப்பட்டது.


Next Story