மேற்கு சீனாவில் திபெத்திய புத்தத்துறவி தீக்குளித்தார்.


மேற்கு சீனாவில் திபெத்திய புத்தத்துறவி தீக்குளித்தார்.
x
தினத்தந்தி 17 April 2017 10:16 AM GMT (Updated: 2017-04-17T15:45:39+05:30)

திபெத்திய புத்தமதத் துறவியொருவர் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்தார். இச் செய்தியை திபெத்தில் பணியாற்றும் கண்காணிப்புக் குழுவும், அமெரிக்க அரசு ஆதரவு பெற்ற வானொலியும் வெளியிட்டுள்ளன.

பெய்ஜிங்

அடையாளம் தெரியாத அந்த புத்தபிட்சு மேற்கு சிச்சுவான் மாகாணத்தின் கன்சி எனுமிடத்திலுள்ள பொதுச் சதுக்கத்தில் தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீ அணைக்கப்பட்டு பிட்சுவை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். பிட்சு உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அப்பிரதேசத்தின் தன்னாட்சி அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் சம்பவம் தொடர்பாக எதையும் தெரிவிக்கவில்லை.

இச்சம்பவத்தின் யூ ட்யூப் காணொலி ஒன்று இருவர் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சியடிப்பதையும் பரபரப்பான சாலை ஒன்றில் இச்சம்பவம் நடைபெறுவதை பலரும் வேடிக்கை பார்ப்பதையும் படம் பிடித்துள்ளது.
பிட்சு தானே தீயிட்டுக்கொண்டார் என்றால் இச்சம்பவம் 2009 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் இது போன்ற தீக்குளிப்பு சம்பவங்களில் 148 ஆவதாகும். அங்கு செயல்பட்டு வரும் தொண்டு அமைப்புகளின் தகவல்படி 125 பேராவது இதுவரையில் இறந்திருப்பார்கள்.

சீனாவைப் பொறுத்தவரை திபெத் பகுதி சுமார் 7 நூற்றாண்டுகளுக்கு அதன் ஆட்சியின் கீழ் இருந்தது என்றும் தலாய் லாமா ஆபத்தான பிரிவினைவாதி என்றும் கருதுகிறது. ஆனால் திபெத்தியர்களோ சீனா தங்களை அடக்கி ஆள்வதாகவும், வரலாற்றில் பெரும்பாலான காலங்களில் சுதந்திரமாகவே இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டில்தான் மிக அதிகமாக 83 பேர் தீக்குளித்து இறந்தனர் எனப்படுகிறது. பெரும்பாலான தீக்குளிப்போர் சுதந்திர திபெத்தையோ அல்லது தலாய் லாமாவின் மறுவருகையையோ கோரிக்கையாக வைப்பது வழக்கம் என்று இது போன்ற சம்பவங்களை நேரில் கண்டவர்கள்.

சென்ற மார்ச் மாதத்திலும் இளம் விவசாயி ஒருவர் தீக்குளித்தார். இச்சூழ்நிலையில் தலாய் லாமாவை அருணாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் செய்ய வைத்த இந்தியாவை சீனா கடுமையாக கண்டித்தது. அவ்வாறு அனுமதித்ததன் மூலம் திபெத் மீதான தனது உரிமையை இந்தியா மதிக்க ஒப்புக்கொண்ட வார்த்தைகளிலிருந்து மீறிவிட்டதாக சீனா கூறியுள்ளது.


Next Story