துருக்கியில் ஆட்சி முறை சீர்திருத்தம்: பொதுவாக்கெடுப்பில் அதிபர் எர்டோகன் வெற்றி


துருக்கியில் ஆட்சி முறை சீர்திருத்தம்: பொதுவாக்கெடுப்பில் அதிபர் எர்டோகன் வெற்றி
x
தினத்தந்தி 17 April 2017 11:45 PM GMT (Updated: 17 April 2017 8:24 PM GMT)

துருக்கியில் ஆட்சி முறை சீர்திருத்தம் குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் அதிபர் தாயீப் எர்டோகன் வெற்றி பெற்றார்.

இஸ்தான்புல்,

இதனால் அங்கு தொடர்ந்து அதிபர் ஆட்சி முறையே நீடிக்கும்.

பொது வாக்கெடுப்பு

துருக்கி நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ராணுவ புரட்சியை அதிபர் தாயீப் எர்டோகன் மக்கள் ஆதரவுடன் முறியடித்தார். இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து ராணுவ புரட்சியில் ஈடுபடலாம் என்று எர்டோகன் கருதியதால் பாராளுமன்ற ஜனநாயக முறையை அகற்றிவிட்டு அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவதற்கு ஏற்ப அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ள பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இது தொடர்பாக நாடு முழுவதும் மக்களின் விருப்பத்தை அறியும் விதமாக பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எர்டோகன் வெற்றி

இதற்காக நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 67 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் உள்ள ஐந்தரை கோடி வாக்காளர்களில் 85 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டனர். இதில், அரசியல் சாசன சீர்திருத்தம் வேண்டுமா? வேண்டாமா? என 2 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் தங்களுக்கு எதில் விருப்பமோ, அதில் முத்திரையிட்டு வாக்களித்தனர்.

பொதுவாக்கெடுப்பு முடிந்ததும், மாலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. நேற்று பிற்பகல் வரை 99.97 சதவீத ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டபோது, அதிபர் எர்டோகன் கொண்டு வந்த சீர்திருத்தத்துக்கு ஆதரவாக 51.41 சதவீதம் பேரும், சீர்திருத்தம் தேவையில்லை என்று 48.59 சதவீதம் பேரும் வாக்களித்து இருந்தனர். இதனால் அதிபர் கொண்டு வந்த சீர்திருத்த தீர்மானம் மயிரிழையில் வெற்றி கண்டது. சீர்திருத்தம் வெற்றி பெற்றதை தேர்தல் கமி‌ஷன் தலைமை தேர்தல் அதிகாரி சடி குவென் உறுதி செய்தார்.

நவீன துருக்கியை நிறுவிய முஸ்தபா கமால் அட்டாதுர்க் மற்றும் அவருக்கு பிறகு வலிமையுடன் ஆட்சி செய்த இஸ்மத் இனோனு ஆகியோரைவிட சக்திவாய்ந்த தலைவராக தற்போது எர்டோகன் உருவாகி இருக்கிறார்.

தெருக்களில் கொண்டாட்டம்

அதேநேரம், நாட்டின் மிகப்பெரிய மூன்று நகரங்களான தலைநகர் அங்காரா, இஸ்தான்புல், இஸ்மிர் ஆகியவற்றில் சீர்திருத்தத்துக்கு எதிராக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து இருந்தனர்.

பொது வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றியை எர்டோகன் ஆதரவாளர்கள் இஸ்தான்புல் நகர தெருக்களில் கொடிகளை அசைத்தவாறு உற்சாகமாக கொண்டாடினர்.

‘‘இது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த முடிவு. எங்கள் நாட்டின் வரலாற்றில் இது மிகப்பெரிய சீர்திருத்தம்’’ என்று அதிபர் எர்டோகன் குறிப்பிட்டார்.

மோசடி

இந்த நிலையில், அதிபர் எர்டோகன் மோசடி செய்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. ‘‘47 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 15 சதவீத மக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே குறைந்தபட்சம் 60 சதவீத வாக்குகளையாவது அதிபர் பெற்றிருந்தால்தான் அது உண்மையான வெற்றி என்று கூறினர். தேர்தலில் விதிமுறைகள் மீறிப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.

ஆட்சி முறை சீர்திருத்தத்துக்கு வெற்றி கிடைத்து இருப்பதால் தற்போதைய அதிபர் 2019–ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஆட்சியில் நீடிக்க முடியும். தவிர மேலும் 2 முறை அவரால் அதிபர் பதவிக்கு போட்டியிட முடியும்.

இந்த நிலையில் துருக்கி துணை பிரதமர் மெஹ்மத் சிம்செக் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பொதுவாக்கெடுப்பு வெற்றி காரணமாக அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை. 2019–ம் ஆண்டுதான் அதிபர் தேர்தல் நடக்கும்’’ என்றார்.


Next Story