உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 17 April 2017 9:35 PM GMT (Updated: 2017-04-18T03:05:09+05:30)

* ஐ.நா.வின் பொருளாதார தடைகளை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா சிறிய ரக ஏவுகணையை ஏவி சோதித்தது.

ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, இனிவரும் காலங்களில் வடகொரியா இதுபோன்ற ஆத்திரமூட்டக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், அந்நாடு ஐ.நா.வின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

* ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் கிளப்டன் ஜேம்ஸ். ‘ஜேம்ஸ்பாண்டு’ திரைப்படங்களில் ஜே.டபுள்யு பெப்பர் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். 96 வயதான இவர் நேற்று முன்தினம் காலமானார்.

* தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்து உள்ள தீவு நாடான வாணாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

* சிரியாவில் அலெப்போ நகரில், பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர வேண்டி மக்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச்செய்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 68 பேர் ஏதுமறியாத அப்பாவி சிறுவர்கள் என தற்போது தெரியவந்து உள்ளது.

* மெக்சிகோ நாட்டில் வெராகுருஸ் மாகாணத்தின் கவர்னராக இருந்து வந்த ஜேவியர் டூர்தே ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இந்த நிலையில் அவர் கவுதமாலா நாட்டில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் நேற்று அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரை மெக்சிகோ கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Next Story