‘பனாமா கேட்’ ஊழல் விவகாரம்; நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு


‘பனாமா கேட்’ ஊழல் விவகாரம்; நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 19 April 2017 9:45 PM GMT (Updated: 2017-04-20T00:11:47+05:30)

இது ‘பனாமா கேட் ஊழல்’ என அழைக்கப்படுகிறது.

இஸ்லாமாபாத்,

பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி கம்பெனிகள் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தின.

அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிவு அடைந்து, இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அந்த தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வழங்கப்படுவதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள வழக்கு தகவல் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அங்கு பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் ஷா மகமது குரேஷி கருத்து தெரிவிக்கையில், ‘‘நாட்டின் சரித்திரத்தில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக அமையும். 57 நாட்கள் காத்திருந்த நிலையில் தீர்ப்பு வருகிறது. இந்த தீர்ப்பு, நாட்டுக்கு பலன் அளிக்கத்தக்கதாக அமையும்’’ என கூறியதாக ‘தி டான்’ ஏடு கூறுகிறது.


Next Story