பாரீஸ் துப்பாக்கி சூட்டில் போலீஸ் உயர் அதிகாரி உயிரிழப்பு; ஐ.எஸ். பயங்கரவாதம் பொறுப்பு ஏற்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் சேம்பஸ் எலிஸஸ் பகுதியில் நேற்று இரவு மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் போலீஸ் உயர் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாரீஸ்,
தேர்தல் நடைபெற உள்ள பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. பாரீஸில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டதில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் இருவர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்த போலீசார் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபரும் போலீஸ் கொடுத்த பதிலடி தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பிரான்ஸில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) முதல்கட்ட அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்று உள்ளது. இச்சம்பவத்திற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேயும் பயங்கரவாத தாக்குதல்தான் என குறிப்பிட்டு உள்ளார். பிரான்ஸில் தேர்தலில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதலானது பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு கூறிய தாக்குதல்களில் 238 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய பிரசாரங்களை முடித்துவிட்டு, தேர்தல் நடைபெற இருந்த நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது, தாக்குதலை அடுத்து அதிபர் ஹாலாண்டே பாதுகாப்பு தொடர்பாக மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
Next Story