சிலியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்


சிலியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
x
தினத்தந்தி 23 April 2017 8:15 PM GMT (Updated: 2017-04-24T01:14:44+05:30)

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில், நேற்று முன்தினம் இரவு 11.36 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

சாண்டியாகோ,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில், நேற்று முன்தினம் இரவு 11.36 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது.

இந்த நில நடுக்கம், வால்பரைசோ நகருக்கு 42 கி.மீ. மேற்கில், 9.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக சிலியின் மத்திய பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர். அவர்கள் வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

சிலி கடற்படையின் நீர்ப்பரப்பு மற்றும் கடல்சார் சேவை பிரிவு, இந்த நில நடுக்கம் சுனாமியை உருவாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது என்று கண்டறிந்தது.

இருப்பினும் அமெரிக்காவின் ஹவாய் தீவை மையமாக கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை எதையும் விட்டதாக தகவல் இல்லை.

இதேபோன்று நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

முன்னதாக வால்பரைசோ நகர் பகுதியில் மாலை நேரத்தில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட்டு, மக்களை பீதி அடைய செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story