பிரான்ஸ் அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு வெற்றி வாய்ப்பு யாருக்கு?


பிரான்ஸ் அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு வெற்றி வாய்ப்பு யாருக்கு?
x
தினத்தந்தி 23 April 2017 9:00 PM GMT (Updated: 2017-04-24T01:21:19+05:30)

பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

பிரான்சில் அதிபர் தேர்தல்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் பிராங்கோயிஸ் ஹாலண்டே அதிபராக உள்ளார். அவரது பதவிக்காலம் முடிய உள்ளதால் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே போட்டியிடவில்லை.

முக்கிய வேட்பாளர்கள்

இருப்பினும் மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 4 வேட்பாளர்களிடையே தீவிர போட்டி நிலவுகிறது.

அவர்கள், தேசியவாத வலதுசாரி கட்சியின் மாரீன் லீ பென், தாராளவாத மையவாதி இமானுவேல் மேக்ரன், பழமைவாத தலைவர் பிராங்கோயிஸ் பிலான், இடதுசாரி வேட்பாளர் ஜீன் லுக் மெலன்கோன் ஆவர்.

இவர்களுடன் தற்போதைய அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயின் சோசலிச கட்சி சார்பில் பினோய்ட் ஹாமோனும் களத்தில் உள்ளார்.

50 சதவீத ஓட்டு

இந்த வேட்பாளர்களில் எவரேனும் 50 சதவீத ஓட்டுகளை பெற்றுவிட்டால் அவர்கள் நேரடியாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று பிரான்ஸ் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எனவே தற்போது களத்தில் உள்ள 11 வேட்பாளர்களில் அதிக ஓட்டுகளைப் பெறுகிற முதல் இரு வேட்பாளர்கள் இடையே, அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதிச்சுற்று தேர்தல் அடுத்த மாதம் 7–ந் தேதி நடக்கும்.

பலத்த பாதுகாப்பு

இந்த தேர்தலில் ஐரோப்பிய யூனியனுடனான பிரான்சின் உறவு, அகதிகள் பிரச்சினை, தீவிரவாத பிரச்சினை முக்கிய இடம் வகிக்கின்றன.

பயங்கரவாத தாக்குதல்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் கட்ட தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. சுமார் 50 ஆயிரம் போலீசார், 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விறுவிறுப்பு

ஓட்டுப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கியது. இரவு 8 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

அமெரிக்கா, கனடா, தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கிற பிரான்ஸ் நாட்டினர் நேற்று முன்தினம் தங்கள் வாக்குகளை செலுத்தி விட்டனர்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

தேசியவாத வலதுசாரி கட்சியின் மாரீன் லீ பென், தாராளவாத மையவாதி இமானுவேல் மேக்ரன் ஆகிய இருவரும் இறுதி சுற்று போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மாரீன் லெ பென் 48 வயதே ஆன பெண் தலைவர். இமானுவேல் மேக்ரனுக்கு 39 வயதுதான். அவர் அதிபரானால் நாட்டிலேயே மிக இளைய வயதில் அதிபரானவர் என்ற பெயரை தட்டிச்செல்வார். இவர் அரசியலில் குதித்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story