ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ராணுவ மந்திரி ராஜினாமா


ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ராணுவ மந்திரி ராஜினாமா
x
தினத்தந்தி 24 April 2017 8:06 AM GMT (Updated: 2017-04-24T13:35:17+05:30)

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அந்நாட்டு ராணுவ மந்திரி ராஜினாமா செய்துள்ளார்.

காபூல்,

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றனர். அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தலீபான்கள் புகலிடம் அளித்து வந்தனர். எனவே ஆப்கானிஸ்தான் தலீபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அந்தப் போரில் அவர்களை அமெரிக்கா வீழ்த்தி, கர்சாய் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அங்கு மக்களாட்சி நடைபெறுகிறது.

ஆனால் அங்கு இன்னும் தலீபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது உள்நாட்டுப்படையினரும், அமெரிக்க கூட்டுப்படையினரும் அவ்வப்போது தாக்குதல் நடத்தினாலும், முழுமையாக அவர்களை ஒடுக்க முடியாமல் திணறுகின்றனர். இந்தநிலையில் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பால்க் மாகாணத்தில் மசார் இ ஷெரீப் நகரில் உள்ள ராணுவ தளத்திற்குள் புகுந்த தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து  பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 140 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலை தடுக்க தவறியதற்கு தார்மீக பொறுப்பேற்று ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவ மந்திரி அப்துல்லா ஹபிபி மற்றும் ராணுவ தலைமை தளபதி கடாம் ஷா ஷமிம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாவை அதிபர் அஷ்ரப் கானி ஏற்றுக் கொண்டுள்ளதாக அதிபர் மாளிகையின் டுவிட்டர் பக்கம் தெரிவித்துள்ளது.

Next Story