இந்தியாவை அச்சுறுத்த கடற்படையை பலப்படுத்தும் சீனா


இந்தியாவை அச்சுறுத்த கடற்படையை பலப்படுத்தும் சீனா
x
தினத்தந்தி 27 April 2017 9:13 AM GMT (Updated: 2017-04-27T15:03:31+05:30)

இந்தியாவை அச்சுறுத்தும் விதமாக கடற்படையை சீனா பலப்படுத்தி வருகிறது.விமானம் தாங்கி போர்க்கப்பலை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளது

சீனாவின் டாலியான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட 50 ஆயிரம் டன் எடையுள்ள விமான தாங்கி போர்கப்பல் கடலில் இறக்கப்பட்டது.

தெற்கு சீன கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறது சீனா.

சீனாவிடம் கடற்படையில் லியோனிங் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் ஏற்கனவே உள்ளது.

இது உக்ரைனிடமிருந்து வாங்கி புதுப்பிக்கப்பட்ட போர்க்கப்பல். இந்நிலையில் உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர்க்கப்பலை தயாரிக்கும் முயற்சியில் சீனா இறங்கியது.

இதற்கான வேலைகள் கடந்த 2013-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சீனாவின் டாலியான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த 50 ஆயிரம் டன் எடையுள்ள அந்த கப்பல் நேற்று கடலில் இறக்கப்பட்டது.

இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்த கப்பல் சீன கடற்படையில் 2020ம் ஆண்டு இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.அதுவும், இந்தியப் பெருங்கடலில் கொண்டுவந்து நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதில் 24 ஜே-15 ரக போர் விமானங்கள், 12 ஹெலிகாப்டர்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இன்னும் அதிக எண்ணிக்கையில் விமானம் தாங்கி போர்க்கப்பலை படையில் சேர்க்க சீனா திட்டமிட்டுள்ளது.

இதுதவிர, இன்னும் ஆறு விமானந்தாங்கி கப்பல்களைச் சீனா கட்டப்போவதாக அந்த நாட்டு அரசு ஆதரவு பத்திரிகை நிறுவனமான 'குளோபல் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.இவை, சீன ஆதரவு நாடுகளின் கடல் பகுதியில் நிறுத்தப்படும் என்றும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, பாகிஸ்தானில் இந்தக் கப்பலைக் கொண்டுபோய் நிறுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க நினைக்கிறது சீனா.

மூன்றாவதாக அணு சக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காய் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.

சீன கடற்படையில் தற்போது 20 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்தவும் சீனா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story