சிரியா தலைநகரில் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் நடவடிக்கையால் பெருத்த சேதம்


சிரியா தலைநகரில் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் நடவடிக்கையால் பெருத்த சேதம்
x
தினத்தந்தி 27 April 2017 11:45 PM GMT (Updated: 2017-04-28T00:08:33+05:30)

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து 7–வது ஆண்டாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

டமாஸ்கஸ்,

இன்னொரு பக்கம் அங்கு பல நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்துகின்றன. இதில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகின்றனர்.

மற்றொரு பக்கம், குர்து இன போராளிகளுக்கு எதிராக துருக்கி போர் விமானங்கள் அவ்வப்போது குண்டுவீச்சு நடத்துகின்றன. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இஸ்ரேலும் வான்தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதன் காரணமாக சிரியா சின்னாபின்னமாகி வருகிறது.

அதிர்வெடி சத்தம்

அங்கு தலைநகர் டமாஸ்கஸ்சில் இருந்து 25 கி.மீ. தொலைவில், சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்தின் வெளியே நேற்று அதிகாலை 4 மணிக்கு அதிர்வெடி சத்தம் கேட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதியே குலுங்கியது. பெரிய கரும்புகை மண்டலமும் உருவானது.

‘‘இது வான் தாக்குதலா அல்லது தரைவழி தாக்குதலா என உறுதிசெய்ய முடியவில்லை’’ என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

பெருத்த பொருள்சேதம்

அதே நேரத்தில் கடந்த காலங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் டமாஸ்கஸ் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தி உள்ளன. ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறி இருக்கிறது.

இதுபற்றி ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் அல் மனார் டெலிவி‌ஷன் கூறுகையில், ‘‘டமாஸ்கஸ் விமான நிலையத்துக்கு வெளியே நேரிட்ட வெடிப்பு, இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலால் நிகழ்ந்து இருக்கலாம்’’ என தெரிவித்தது.

சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தெல் ரகுமான் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, ‘‘வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தெரியாது. ஆனால் அந்தப் பகுதியே தீப்பிடித்து எரிந்ததைக் காண முடிந்தது’’ என கூறினார்.

அல் மனார் டெலிவி‌ஷன் செய்தியாளர், ‘‘வெடிப்பில் எண்ணெய் கிடங்குகள், சரக்கு கிடங்குகள் சிக்கி எரிந்தன. இது இஸ்ரேல் நடத்திய தாக்குதலாகத்தான் இருக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.

வழக்கமாக இப்படிப்பட்ட தாக்குதல்களை இஸ்ரேல் உறுதிப்படுத்துவதும் இல்லை, மறுப்பதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை தாக்குதல்

வெடிப்பை நேரில் கண்ட புறநகர்வாசி மேதாம் என்பவர் கூறுகையில், ‘‘அதிகாலை 4 மணிக்கு மிக பயங்கரமான சத்தம் கேட்டது. நான் உடனே மாடத்துக்கு வெளியே ஓடி வந்து, தெற்கு திசையை நோக்கிப் பார்த்தேன். அப்போது மிகப்பெரிய நெருப்பு பந்து ஒன்று கீழே விழுந்தது போல கண்டேன். மின்சாரம் தடைபட்டது. கரும்புகையும் வந்தது’’ என குறிப்பிட்டார்.

கடைசியாக கிடைத்த தகவல்கள், டமாஸ்கஸ் விமான நிலையத்தின் தென்மேற்கில் உள்ள சிரியாவின் ராணுவ தளத்தை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறுகின்றன.

இது குறித்த தகவல்களை வெளியிட்ட சிரிய அரசு ஊடகம், ‘‘இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு செயலால் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என கூறியது.


Next Story