அமெரிக்காவில் பயங்கரம் இந்திய வம்சாவளி தம்பதியர் சுட்டுக்கொலை பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள்


அமெரிக்காவில் பயங்கரம் இந்திய வம்சாவளி தம்பதியர் சுட்டுக்கொலை பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 6 May 2017 11:30 PM GMT (Updated: 2017-05-06T23:45:16+05:30)

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதியர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணம், சான்ஜோஸ் நகரத்தில் லாரா வில்லே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், நரேன் பிரபு. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சிலிக்கான்வேலி பகுதியில் அமைந்துள்ள ‘ஜூனிபெர் நெட்வொர்க்ஸ்’ என்ற நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

நரேன் பிரபு தம்பதியருக்கு ஒரு மகள், 2 மகன்கள் என 3 பிள்ளைகள்.

பிணைக்கைதிகளாக....

இந்த நிலையில் கடந்த 3–ந் தேதி (புதன்கிழமை) இரவு, நரேன் பிரபு வீட்டில் இருந்தார். அவருடன் மனைவி ரய்னா மற்றும் 2 மகன்கள் இருந்தனர். அவர்களது மகள் ரேச்சல் ஊரில் இல்லை.

அப்போது வீட்டுக்குள் ஒரு வாலிபர் அதிரடியாக நுழைந்து, நரேன் பிரபு, அவரது மனைவி ரய்னா மற்றும் 13 வயது மகன் ஆகியோரை சிறை பிடித்தார். அந்த நேரம் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த நரேன் பிரபுவின் 20 வயது மகன் இதைப் பார்த்து உடனடியாக போலீசில் புகார் செய்தார். உடனே ‘ஸ்வாட்’ என்னும் அதிரடி படை போலீசார் வீட்டுக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் உடனடியாக நரேன் பிரபு, மனைவி ரய்னா மற்றும் அவர்களது மகனை பிணைக்கைதிகளாக பிடித்திருந்த வாலிபரை சரண் அடையுமாறு கூறினர். ஆனால் அவர் சரண் அடைய மறுத்து விட்டார். அதே நேரம், நரேன் பிரபுவின் 13 வயது மகனை மட்டும் வெளியே அனுப்பி வைத்தார்.

துப்பாக்கிச்சூடு

தொடர்ந்து வீட்டுக்குள் தொடர்ந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

கடைசியில் ‘ஸ்வாட்’ போலீஸ் படையினர் வீட்டுக்குள் சென்றனர். அங்கே நரேன் பிரபுவும், அவரது மனைவி ரய்னாவும் சுட்டுக்கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களை சுட்டுக்கொன்று விட்டு அந்த வாலிபரும் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடந்தார்.

அதைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் போலீஸ் படையினர் கைப்பற்றி ஆம்புலன்சுகளில் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னணி என்ன?

இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீஸ் படையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள்:–

* துப்பாக்கிச்சூட்டை நடத்திய வாலிபர் மிர்சா டாட்லிக்; அவர் நரேன் பிரபுவின் மகள் ரேச்சலை காதலித்து வந்துள்ளார். ஆனால் அடிக்கடி மிர்சா டாட்லிக் அடிதடியில் இறங்குபவர் என தெரியவந்தது. இதன் காரணமாக ரேச்சல், கடந்த ஆண்டு அவரைப் பிரிந்து விட்டார்.

* ரேச்சல், தன்னை மிர்சா டாட்லிக் சந்திக்க வரக்கூடாது என முறைப்படி தடை உத்தரவும் பெற்றார்.

* இந்த நிலையில்தான் ரேச்சல் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்து, அவரது பெற்றோருடன் சண்டை போட்டு அவர்களை மிர்சா டாட்லிக் சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் சான்ஜோஸ் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட நரேன் பிரபுவின் பூர்விகம், கர்நாடக மாநிலம் மங்களூர் என தெரிய வந்துள்ளது.


Next Story