தென் கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜே இன் பதவி ஏற்றார்


தென் கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜே இன் பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 10 May 2017 11:30 PM GMT (Updated: 2017-05-11T00:06:10+05:30)

தென் கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜே இன் பதவி ஏற்றார். கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த எதையும் செய்வேன் என அவர் சூளுரைத்தார்.

சியோல்,

தென் கொரியாவில் தோழி சோய் சூன் சில்லுடன் ஊழல் வழக்கில் சிக்கியதால், அதிபர் பார்க் கியுன் ஹையின் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு நேற்று முன்தினம் புதிய அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று, தாராளவாத ஜனநாயக கட்சி வேட்பாளர் மூன் ஜே இன் (வயது 64) வெற்றி பெற்றார். இதை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்தது.

சியோலில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடந்த எளிய நிகழ்ச்சியில் புதிய அதிபராக மூன் ஜே இன் பதவி ஏற்றுக்கொண்டார். பத்தே நிமிடங்களில் அவரது பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்து விட்டது.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு

பதவி ஏற்பதற்கு முன்னதாக அவர் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், அவர்களிடம் ‘‘தேசத்தின் பாதுகாப்பு வி‌ஷயங்களில் உங்களுடன் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவேன்’’ என வாக்குறுதி அளித்தார்.

இவர் வடகொரிய அகதிகளின் மகன் ஆவார். தாராளவாத கருத்துக்களை வெளிப்படுத்துபவர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார். வடகொரியாவுடன் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை உடையவர் என்பது சிறப்பம்சம்.

நாட்டு மக்களுக்கு உரை

தற்போது வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளாலும், ஏவுகணை சோதனைகளாலும், அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர்ப்பதற்றம் நிலவுகிற சூழலில், மூன் ஜே இன், தென்கொரிய அதிபர் ஆகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிபர் பதவி ஏற்றதும், மூன் ஜே இன், நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நான் எதையும் செய்வேன்.

பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு அவசரமாக தீர்வு காண வேண்டும். அதற்காக முயற்சிப்பேன்.

‘வடகொரியா செல்வேன்’

தேவைப்பட்டால் வாஷிங்டனுக்கு உடனடியாக செல்வேன். அங்கு மட்டுமின்றி பீஜிங்கிற்கும், டோக்கியோவுக்கும் கூட செல்வேன். ஏன், சரியான சூழல்கள் வாய்த்தால் நான் வடகொரியாவுக்கும் செல்வேன்.

தாட் என்னும் சர்ச்சைக்குரிய ஏவுகணை அமைப்பை தென்கொரியாவில் அமெரிக்கா நிறுவி இருப்பது குறித்து அமெரிக்காவுடனும், சீனாவுடனும் தீவிர பேச்சுவார்த்தை நடத்துவேன்.

நான் இந்தப் பதவிக்கு வரும்போது வெறும் கையோடுதான் வந்தேன். அதே போன்று பதவியை விட்டுச்செல்லும்போதும் வெறும் கையோடுதான் செல்வேன்.

‘வடகொரிய உறவு பற்றி விவாதிப்பேன்’

தென் கொரிய–வடகொரிய உறவுகளில், தேச பாதுகாப்பில், தென் கொரிய–அமெரிக்க உறவில், லிபர்ட்டி கொரியா கட்சி எனக்கு உதவுகிறபட்சத்தில், நான் சிறப்பாக செயல்படுவேன்.

தேச பாதுகாப்பு குறித்த தகவல்களை எதிர்க்கட்சி தலைவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். இது எனக்கு விவேகத்தை தரும்.

வட கொரியாவுடனான உறவுகள், பொருளாதார விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

ஊழலில் இருந்து நாட்டை விடுவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகள் பாராட்டு

தென் கொரிய அதிபர் தேர்தலில் மூன் ஜே இன் வெற்றி பெற்றிருப்பது குறித்து வடகொரியா வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் தேர்தலின்போது மூன் ஜே இன்தான் தனது முன்னுரிமை வேட்பாளர் என்று குறிப்பால் உணர்த்தியது.

மூன் ஜே இன் வெற்றி பெற்றிருப்பதை அமெரிக்கா பாராட்டி உள்ளது. இதே போன்று சீனாவும், ஜப்பானும் கூட வாழ்த்து தெரிவித்துள்ளன.

Next Story