2 நாள் இலங்கை பயணம்: பிரதமர் மோடி கொழும்பு சென்றார்


2 நாள் இலங்கை பயணம்: பிரதமர் மோடி கொழும்பு சென்றார்
x
தினத்தந்தி 12 May 2017 12:00 AM GMT (Updated: 11 May 2017 9:25 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பு சென்றடைந்த அவரை விமான நிலையத்தில் ரனில் விக்ரம சிங்கே வரவேற்றார்.

கொழும்பு,

கொழும்புவில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் (புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்) கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள ஆஸ்பத்திரியை திறந்து வைக்கவும், தமிழர்களை சந்தித்துப்பேசவும் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று எழுதி உள்ளார். அதில் அவர், ‘‘2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இலங்கை செல்கிறேன். எங்களின் வலுவான உறவுக்கு இது அடையாளம். எனது பயணத்தின்போது, கொழும்பில் நாளை (இன்று) வெசாக் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறேன். புத்த மத தலைவர்களுடன் கலந்துரையாடுகிறேன். அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரம சிங்கே ஆகியோருடன் இந்த விழாவில் கலந்துகொள்வதை கவுரவமாக கருதுகிறேன்’’ என்று கூறி உள்ளார்.

மேலும், ‘‘இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள திக்கோயா ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்கிறேன். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறேன்’’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடிக்கு வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கொழும்பு புறப்பட்டார். அங்கு போய்ச் சேர்ந்த அவரை கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அந்த நாட்டின் பிரதமர் ரனில் விக்ரம சிங்கே வரவேற்றார்.

இதுபற்றி நரேந்திர மோடி, ‘‘கொழும்பை வந்தடைந்து விட்டேன். இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கே சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வேன்’’ என டுவிட்டரில் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

புத்த கோவிலில் மோடி

வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயுடன் கொழும்பு நகரில் உள்ள 120 ஆண்டு பழமையான கங்கராமய்யா கோவிலின் அங்கமாக திகழ்கிற சீமா மாலகா புத்த கோவிலுக்கு சென்றார்.

சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் பாரம்பரிய வழக்கப்படி, மோடி அந்த புத்த கோவிலின் கருவறைக்குள் சென்றார். அங்கு அவர் விளக்கு ஏற்றி வழிபட்டார்.

தமிழர்களுடன் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசுகின்றனர்.

இது குறித்து இரா.சம்பந்தன் கூறுகையில், ‘‘பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, தற்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து விளக்க உள்ளேன். உள்நாட்டுப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர். இந்த நிலையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவேன்’’ என்றார்.

அரசியல் தீர்வு

மேலும், ‘‘நியாயமான நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தித்தர வலியுறுத்துவேன். இந்தியாவுக்கு இலங்கை பல வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதிகாரப்பகிர்வுக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பேன். பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு, ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்’’ என்றும் குறிப்பிட்டார்.

Next Story