இலங்கையில் தமிழில் பேசி மக்களை கவர்ந்த பிரதமர் மோடி! இந்திய அரசு 10 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்கும் என அறிவிப்பு


இலங்கையில் தமிழில் பேசி மக்களை கவர்ந்த பிரதமர் மோடி! இந்திய அரசு 10 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்கும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 12 May 2017 12:23 PM GMT (Updated: 2017-05-12T17:53:07+05:30)

பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.


கொழும்பு,

கொழும்புவில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் (புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்) கலந்து கொண்டார், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார். அங்கு தேயிலை தோட்டத் தொழிலாளர்களிடையே பிரதமர் மோடி பேசினார். 

பிரதமர் மோடி உரை விபரம்:- சகோதர, சகோதரிகளே வணக்கம். உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்ரம் சிங் மற்றும் நண்பர்களே இன்று உங்களுடன் கலந்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன், உங்களுடைய இதயம் கனிந்த உற்சாகமான இந்த வரவேற்பிற்கு நன்றி பாராட்ட கடமை பட்டு உள்ளேன். இந்த அழகிய வருகை தரும் முதலாவது இந்திய பிரதமர் என்பது எனக்கு மிகப்பெரிய கவுரம். உங்களுடன் பேசுவதற்கு கிடைத்த இந்த வாய்ப்பை அதைவிட பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.

உலக புகழ்பெற்ற இலங்கை தேயிலை இந்த வளமிக்க மலையகத்தில் விளைகிறது என்பது உலக மக்கள் அறிந்த ஒன்று. ஆனால் இந்த இலங்கை தேயிலை பல உலக மக்களின் தேர்வாக அமைய காரணம் உங்களின் வேர்வையும் உழைப்பும் என்பது பலரும் அறிந்திராத ஒன்றாகும். இலங்கை உலகில் தேயிலை ஏற்றுமதியில் மூன்றாவது நாடாக இருப்பதற்கு உங்களுடைய கடின உழைப்பே காரணம். உலகம் எங்கும் வெற்றிநடை போட்டு பரந்து வளர்ந்து வருகின்ற இலங்கை தேயிலை தொழில்துறையின் இண்றிமையாத முதுகெழும்பாக திகழ்பார்கள் நீங்கள். உங்களுடைய கடின உழைப்பை நான் பாராட்டுகின்றேன்.

உங்களுக்கும், எனக்கும் இடையே ஒரு பொதுவான ஒற்றுமை இருக்கிறது, தேயிலைக்கும், எனக்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு என்பதை உங்களில் பலர் கேள்வி பட்டு இருக்கலாம். தேநீருடனான கலந்துரையாடல் என்பது ஒரு சுலோகம் மட்டும் கிடையாது. மாறாக உண்மையான உழைப்பின் மிதான ஆழ்ந்த மரியாதை குறிக்கிறது. இன்று நாம் உங்களுடைய முன்னோர்களை நினைவு கூறுகிறோம், அவர்கள் வலுவான மனோ தைரியத்துடன் தங்கள் வாழ்க்கை பயனத்தை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மேற்கொண்டார்கள். அந்த கடினமான பயணத்தில் அவர்கள் பல்வேறு இன்னல்கள் மற்றும் போராட்டங்களை சந்திக்க நேரிட்டது. 

ஆனால் அவர்கள் அந்த பயணத்தை ஒருபோதும் கைவிடவில்லை. இன்று அவர்களுடைய மனோ தைரியத்திற்கு தலை வணங்குகின்றேன். 
உங்கள் தலைமுறையும் தொடர்ச்சியாக கஷ்டங்களை சந்திக்க நேரிட்டது. புதியதாக சுதந்திரம் பெற்ற நாட்டில் உங்களுடைய சொந்த அடையாளத்தை நிலைநாட்டும் கடுமையான நிலையை எதிர்க்கொண்டீர்கள், ஆனால் அவற்றை நீங்கள் தைரியமாக சந்தித்தீர்கள், உங்கள் உரிமைகளுக்காக போராடினீர்கள். ஆனால் அதை அமைதியான முறையிலே செய்தீர்கள். உங்களுடைய உரிமைக்காகவும், மேம்பாட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் கடினமாக உழைத்த சௌமிய மூர்த்தி தொண்டமான் போன்ற தலைவர்களை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்.

 நண்பர்களே இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு தமிழ் அறிஞர் கணியன் பூங்குன்றனார் யாரும் ஊரே யாவரும் கேளிர் என பறைசாற்றினார்.  அந்த வார்த்தனையின் உண்மையான அர்த்தத்தை நீங்க பிரதிபலிக்கிறீர்கள். இலங்கையை உங்களுடைய வீடாக்கி கொண்டீர்கள். இலங்கை தேசத்தின் பிரிக்க முடியாதவர்களாகிவிட்டீர்கள். நீங்கள் அனைவரும் தமிழ்த் தாயின் பிள்ளைகள். உலகில், வாழும் மொழிகளில் மிகவும் பழமையான பாரம்பரியமும் கொண்ட செம்மொழியான தமிழ் மொழியை பேசுகிறீர்கள். அதோடு சிங்களத்தையும் பேசுகிறீர்கள் என்பது பெருமைக்குரியாதாகும். 

மொழி என்பது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் கருவி மட்டுமல்ல, அது கலாசாரத்தை வரையறுக்கிறது. சமூகங்களை சேர்க்கிறது. ஒரு சமூகத்தின் வேறுபாடுகள் கொண்டாட்டங்களுக்கு வழிகோல வேண்டுமே தவிர, முரண்பாடுகளுக்கு வித்திடக்கூடாது. நீங்கள் இந்தியா மற்றும் இலங்கை அரசு, மக்கள் இடையே முக்கியமான இணைப்பு, இருநாட்டு பந்தங்களின் தொடர்ச்சியாக நாங்கள் உங்களை பார்க்கிறோம் என் அரசின் முன்னுரிமை இந்த இணைப்புகளை வளர்ப்பது. மற்றும் அனைத்து இந்திய மற்றும் இலங்கை மக்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இந்த கூட்டுறவை மேம்படுத்துவது. 

நண்பர்களே நீங்கள் இன்றும் இந்தியா உடனான உறவை தாக்கவைத்து உள்ளீர்கள், உங்கள் சொந்தங்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இந்திய பண்டிகைகளை உங்கள் பண்டிகையாக கொண்டாடுகிறீர்கள். இந்திய கலாச்சாரத்தில் மூழ்கி அது உங்களுடையதாகவே ஆக்கி கொண்டீர்கள். இந்தியா உங்கள் எல்லோருடைய இதயத்தில் துடிக்கிறது, உங்களுடைய இந்த ஆழ்ந்த உணர்வு, அரவணைப்பு இந்தியா முழுமையாக உணர்ந்து பிரதிபலிக்கிறது. உங்களுடைய முன்னோர்கள் இலங்கை வந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாக போகிறது, இந்த மையில் கல்லை நெருங்கும் வேலையில் இந்தியா உங்களுடன் தொடர்ந்து பங்கேற்கும். உங்களுடைய பொருளாதார, சமூக அபிவிருத்தியில் நாங்கள்  சாத்தியமான அனைத்து வகையிலும் தொடர்ந்து பாடுபடுவோம். 

இலங்கை அரசும் உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த திட்டங்களை நடைமுறை படுத்தி வருவதை அறிவோம், இந்த திட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் இந்தியா முழுவதும் ஆதரவு அளிக்கிறது. இலங்கை அரசுடன் சேர்ந்து, இந்தியாவும் உங்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை, குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் திறன் அபிவிருத்தி துறையில் முன்னெடுத்து வருகிறது. மலையக மாணவர்களின் கல்வி ஊக்கமளிக்க 1947ம் ஆண்டே இலங்கை தோட்ட தொழிலாளர்கள் கல்வி அறக்கட்டளை நிறுவப்பட்டது. 

வருடம் தோறும் 700 மாணவர்களுக்கு இலங்கையிலும், இந்தியாவிலும் கல்வி கற்க இந்திய அரசின் மூலம் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. உங்கள் குழந்தைகள் இதன்மூலம் பயன் அடைந்து இருப்பார்கள் என நம்புகின்றேன். உங்கள் வாழ்வாதாரம் மற்றும் திறன் அபிவிருத்தியை மேம்படுத்த தொழில்பயிற்சி நிலையங்கள் அமைத்து உள்ளோம். ஆங்கில மொழி பயிற்சி மையங்கள், கணினி மற்றும் அறிவியில் ஆய்வு மையம் அமைய உதவிஉள்ளோம். கல்வி சாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் செயல்திட்டங்களில் ஈடுபட்டு உள்ளோம். 

இலங்கையில் இந்திய அரசு மேற்கொள்ளும் வீடு வழக்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக இன்னும் 10 ஆயிரம் வீடுகள் மலையக பகுதியில் கட்டி கொடுக்கப்படும். நண்பர்களே உங்கள் முன்னேற்றத்திற்கு நாங்கள் துணையாக இருக்கிறோம், கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களுக்கும் ஓளிமயமான எதிர்காலத்திற்கு நாங்கள் துணையாக இருக்கிறோம். திருவள்ளுவர் சொன்னது போல ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. அதாவது உயர்வும் செல்வமும் உறுதியான ஊக்க உடையவனை தானாக தேடி கண்டுபிடித்து சென்றுவிடும். அந்த ஓளிமயமான எதிர்காலத்தில் உங்கள் கனவுகளையும், உங்கள் குழந்தைகளின் கனவுகளையும் உங்கள் பாரம்பரியத்தையும் கட்டி காக்கும் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை. உங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம் என்றார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி பேசுகையில் இலங்கை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை தந்துள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது என்று குறிப்பிட்டார். அப்போது கூடியிருந்த தமிழர்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனினும் மோடிக்கு முன்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உரையாற்றினார்கள். ஆனால் தமிழில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. தமிழ் மக்கள் கூடியிருந்த அந்த இடத்தில் இலங்கை பிரதமரும், ஜனாதிபதியும் கூட தமிழில் பேசாத நிலையில், இந்தியப் பிரதமர் தமிழின் பெருமை பற்றியும், இந்து சமயம் பற்றியும், இலக்கியக்கதைகள், பாடல்கள் மற்றும் திருக்குறள் என அனைத்தும் தமிழில் பேசியமை மலையக மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என தமிழ்வின் செய்தி வெளியிட்டு உள்ளது. முன்னதாக பிரதமர் மோடியை தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

Next Story