‘இந்தியாவின் வளர்ச்சி இலங்கைக்கு பயன் அளிக்கும்’ கொழும்புவில் பிரதமர் மோடி பேச்சு


‘இந்தியாவின் வளர்ச்சி இலங்கைக்கு பயன் அளிக்கும்’ கொழும்புவில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 13 May 2017 12:15 AM GMT (Updated: 2017-05-13T03:43:13+05:30)

இந்தியாவின் வளர்ச்சி இலங்கைக்கு பயன் அளிக்கும் என கொழும்புவில் நடந்த புத்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கொழும்பு,

புத்த மதத்தை தோற்றுவித்த கவுதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்றது மற்றும் அவரது இறப்பின் நினைவாக வெசாக் தினம் (புத்த பூர்ணிமா) கொண்டாடப்படுகிறது. புத்த மதத்தினரின் மிகப்பெரிய திருவிழாவான இந்த வெசாக் தினத்தையொட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதை ஏற்று வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி கொழும்பு சென்றார். அவரை இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வரவேற்றார்.

தொடங்கி வைத்தார்

வெசாக் தின கொண்டாட்டங்கள் கொழும்பு நகரில் நேற்று தொடங்கியது. இதை பிரதமர் நரேந்திர மோடி விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் ஏராளமான புத்த துறவிகள் வேதமந்திரங்கள் ஓதி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் பிரதமர் கைகளை கூப்பி, கண்களை மூடியவாறு பக்தியுடன் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதர்கள், ஏராளமான புத்த துறவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

விலைமதிப்பில்லா பரிசு

விலைமதிப்பில்லா பரிசான புத்தரையும், அவரது போதனைகளையும் உலகுக்கு அளித்திருப்பதன் மூலம், இந்த பிராந்தியம் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா, இலங்கை இடையேயான நட்புறவில் மிகப்பெரிய வாய்ப்பின் தருணம் இருப்பதை நான் நம்புகிறேன். நெருங்கிய அண்டை நாடுகள் என்ற முறையில் நமது நட்புறவு பல அடுக்குகளை தாண்டி விரிந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த எமது சகோதர, சகோதரிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. நமது வளர்ச்சி ஒத்துழைப்பை ஆழப்படுத்த நேர்மறையான மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகளை நாங்கள் தொடருவோம். இந்தியாவில் நீங்கள் ஒரு நண்பரையோ அல்லது கூட்டாளியையோ கண்டுபிடிக்கலாம். அது உங்கள் தேச கட்டுமானத்துக்கு உதவிகரமாக இருக்கும்.

பிரிக்க இயலாதது

தாராள வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் எல்லைகளை கடந்த யோசனை ஆகியவை பரஸ்பரம் பயனளிக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் அசுர வளர்ச்சி ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கு குறிப்பாக இலங்கைக்கு மிகுந்த பயனை அளிக்கும். எரிசக்தி, கட்டுமானம், தொடர்பு மற்றும் போக்குவரத்து துறைகளில் நமது ஒத்துழைப்பை அதிகரிக்க தயாராக இருக்கிறோம்.

125 கோடி இந்திய மக்களின் வாழ்த்துகளுடன் இங்கு வந்திருக்கிறேன். இலங்கை மக்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி 125 கோடி இந்திய மக்களுடன் தொடர்புடையது. ஏனெனில் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நிலத்திலும் சரி, நீரிலும் சரி நமது சமூகத்தின் பாதுகாப்பு பிரிக்க இயலாதது. இந்தியாவின் வளர்ச்சி இலங்கைக்கு பயன் அளிக்கும்.

உலக அமைதிக்கு சவால்

இன்றைய சூழலில் உலகின் நிலையான அமைதிக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது நாடுகளுக்கு இடையேயான மோதல் அல்ல. மாறாக வெறுப்பு மற்றும் வன்முறையில் ஊறிய மனநிலையும், எண்ண ஓட்டங்களும் மற்றும் கருவிகளுமே காரணம். இந்த அழிவு உணர்வின் உறுதியான வெளிப்பாடே, நமது பிராந்தியத்தின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு காரணம் ஆகும்.

இத்தகைய சூழலில் புத்தரின் போதனைகள் இந்த 21–ம் நூற்றாண்டுக்கும் தொடர்புடையவையாக அமைந்துள்ளதுடன், புத்த மதமும், அதன் பல்வேறு போக்குகளும் நமது நல்லாட்சி, கலாசாரம் மற்றும் தத்துவங்களில் ஆழமாக பொதிந்துள்ளன. உலகம் முழுவதும் பெருகி வரும் வன்முறைகளுக்கு, புத்தரின் அமைதி போதனைகள் பாடமாக அமையும்.

வாரணாசி–கொழும்பு
விமான சேவை

இந்தியாவின் புனித நகரான வாரணாசிக்கும், கொழும்புவுக்கும் இடையே ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவை ஆகஸ்டு மாதம் தொடங்குகிறது. எனது தமிழ் சகோதர, சகோதரிகள் காசி விஸ்வநாதரின் புனித பூமியான வாரணாசியை தரிசிக்கவும், புத்தர் முதன் முதலில் போதனையை தொடங்கிய இடமான சாரனாத் மற்றும் கயா உள்ளிட்ட பகுதிகளை புத்த மதத்தினர் பார்வையிடவும் இந்த விமான சேவை பலனளிக்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

பிரதமர் மோடிக்கு நன்றி

இந்த நிகழ்ச்சியில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேசும்போது கூறுகையில், ‘கொழும்புவில் வெசாக் தின கொண்டாட்டங்களை நடத்துவதற்காக நான் பெருமையடைகிறேன். இந்த கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன்’ என்றார்.

புத்தரின் போதனைகள் இன்றைய உலகிற்கும் தேவையானதாக இருப்பதாக கூறிய ரனில் விக்ரமசிங்கே, சமூக நீதியை ஒருங்கிணைப்பதற்கு புத்தமதம் மிதமான பாதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

Next Story