25 வயதான இளம் விஞ்ஞானி அமெரிக்க அழகியாக தேர்வு


25 வயதான இளம் விஞ்ஞானி அமெரிக்க அழகியாக தேர்வு
x
தினத்தந்தி 15 May 2017 10:45 PM GMT (Updated: 15 May 2017 8:34 PM GMT)

அமெரிக்க நாட்டின் சிறந்த அழகியை தேர்வு செய்யும் ‘மிஸ் அமெரிக்கா’ போட்டி நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

லாஸ் வேகாஸ்,

வெவ்வேறு மாநிலங்களின் சார்பில் 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்ள, பல்வேறு கட்ட போட்டிகள் நடைபெற்றன. இவர்களில் 3 பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் வாஷிங்டன் மாகாணத்தின் கொலம்பியா மாவட்டத்தை சேர்ந்த காரா மெக்கல்லோ (வயது 25). நியூஜெர்ஸி மாகாணத்தை சேர்ந்த சாவ்வி வெர்ஜ். மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த மெரிடித் கோல்ட் ஆவர். இறுதிப்போட்டியாளர்களிடம் நடுவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு காரா மெக்கல்லோ சாதூர்யமாக பதிலளித்தார். அதனை தொடர்ந்து அவர் ‘மிஸ் அமெரிக்கா’ வாக தேர்வு செய்யப்பட்டார்.

காரா மெக்கல்லோ வேதியியல் படிப்பில் பட்டம் பெற்று, அமெரிக்க அணு ஒழுங்குமுறை ஆணையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து 2-வது முறையாக வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த போட்டியாளர் அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அழகியாக பட்டம் சூட்டப்பட்ட பின் பேசிய காரா மெக்கல்லோ “பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமமானவர்கள், குறிப்பாக வேலைபார்க்கிற இடங்களில்” என குறிப்பிட்டார். மேலும் தான் ஒரு பெண்ணியவாதி இல்லை என கூறிய அவர் சம உரிமையை விரும்புவதாக தெரிவித்தார்.

அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் காரா மெக்கல்லோ இந்த ஆண்டு நடைபெறும் பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்பார்.


Next Story