அரசியல் கட்சியினர் 4 பேர் படுகொலை: 23 பேருக்கு மரண தண்டனை


அரசியல் கட்சியினர் 4 பேர் படுகொலை: 23 பேருக்கு மரண தண்டனை
x
தினத்தந்தி 17 May 2017 9:25 PM GMT (Updated: 17 May 2017 9:25 PM GMT)

வங்காளதேசத்தில் 2002-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந் தேதி பரேக், பாதல், பாரூக், கபீர் ஆகியோர்களை அவர்களது வீட்டில் இருந்து பிடித்துச்சென்று உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

டாக்கா

வங்காளதேசத்தில் 2002-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந் தேதி பரேக் என்பவரும், அவரது நெருங்கிய உறவினர்களான பாதல், பாரூக், கபீர் ஆகியோரும், அவர்களது வீட்டில் இருந்து பிடித்துச்சென்று உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்கள் 4 பேரும் தற்போது அங்கு ஆட்சி செய்கிற அவாமி லீக் கட்சியினர் ஆவார்கள்.

இந்த படுகொலை தொடர்பாக அந்த நாட்டின் எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சியின் கோபால்டி பகுதி தலைவர் அபுல் பஷார் காசு உள்ளிட்ட 23 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நாராயண்கஞ்ச் 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி காம்ருன்நஹார் விசாரித்தார்.

விசாரணை முடிவில் 23 பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிபதி அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

தண்டிக்கப்பட்டவர்களில் 4 பேர் இன்னும் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story