4 தலீபான் பயங்கரவாதிகளுக்கு தூக்கு பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் தண்டனை நிறைவேற்றம்

4 தலீபான் பயங்கரவாதிகளுக்கு தூக்கு பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் தண்டனை நிறைவேற்றம்
x
தினத்தந்தி 17 May 2017 9:30 PM GMT (Updated: 2017-05-18T03:00:21+05:30)

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தலீபான் அமைப்பில் சேர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள், அகமது அலி, அஸ்கார்கான், ஆரூண் உர் ரஷீத், குல் ரகுமான் ஆவார்கள்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தலீபான் அமைப்பில் சேர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள், அகமது அலி, அஸ்கார்கான், ஆரூண் உர் ரஷீத், குல் ரகுமான் ஆவார்கள்.

இவர்கள் 4 பேரும் பாதுகாப்பு படையினர், அப்பாவி மக்கள், போலீஸ் படையினர் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தினர்.

இது மட்டுமின்றி, அங்குள்ள மசூதிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தி உள்ளனர்.

இது தொடர்பாக, அவர்கள்மீது ராணுவ கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

அந்த வழக்குகளின் விசாரணை முதலில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளிலும், பின்னர் ராணுவ கோர்ட்டுகளிலும் நடத்தப்பட்டபோது 4 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்கள். இதையடுத்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கருதிய ராணுவ கோர்ட்டுகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் ராணுவ தளபதி உறுதி செய்தார். இதையடுத்து 4 பேரும் நேற்று ஒரே நேரத்தில் தூக்கில் போடப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவல்களை வெளியிட்ட ராணுவ உளவுத்துறை, அவர்கள் எந்த சிறைகளில் வைத்து தூக்கில் போடப்பட்டனர் என்பது பற்றிய விவரத்தை வெளியிடவில்லை. 

Next Story