இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் போலீஸார் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு


இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் போலீஸார் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 19 May 2017 9:16 AM GMT (Updated: 19 May 2017 9:25 AM GMT)

இலங்கையின் விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த கிளிநொச்சி பகுதியில் போலீஸார் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பு,

இலங்கையில்  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த போரின் எட்டாவது ஆண்டு நினைவு தினம் நேற்று அந்நாட்டில் அனுசரிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே  முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றது. இதில் தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த இனப்படுகொலையின் நினைவுதினம் விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த கிளிநொச்சியில் நேற்று அனுசரிக்கப்பட்டது.  இந்த நிலையில், கிளிநொச்சி பகுதியில் இன்று அதிகாலை போலீசாரை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் எந்த போலீசாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இன்று அதிகாலை போலீஸ் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்ததாக பொது மக்கள் தெரிவித்தனர். பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் போலீசார் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story