வங்காளதேசத்தில் புதிய ரூ.2000 நோட்டுகள் பிரிண்ட்! பாகிஸ்தான் கைவரிசை


வங்காளதேசத்தில் புதிய ரூ.2000 நோட்டுகள் பிரிண்ட்! பாகிஸ்தான் கைவரிசை
x
தினத்தந்தி 22 May 2017 8:04 AM GMT (Updated: 2017-05-22T14:56:01+05:30)

வங்காளதேச தலைநகர் டாக்காவில் இந்தியா ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து விசாரிக்கப்படுகிறது.


டாக்கா, 

2016 நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அவற்றை பெற்றுக் கொண்டு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. போலி ரூபாய் நோட்டுகள் இனி அச்சடிக்க முடியாது என இந்திய அரசு கூறியது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லையில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் எல்லைப் பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

குறிப்பாக வங்காளதேச எல்லையில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ச்சியாக சிக்கியது, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்து இருந்த தகவலில் 17 எல்லை மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்பு படை, தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறையால் 6.2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் வங்காளதேச தலைநகர் டாக்காவில் இந்தியாவின் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் போலியா அச்சடிக்கப்படுகிறது என தெரியவந்தது. 

வங்க தேச தலைநகர் டாக்காவில் கடந்த மாதம் அந்நாட்டு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அரசு வெளியிட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது தெரியவந்தது. அச்சடித்த கும்பலும் சிக்கியது. பிரிண்டிங் உபகரணங்கள் மற்றும் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. முதல்கட்ட தகவல்கள்படி ரூ. 15,34,000 மதிப்பில் போலி ரூபாய் நோட்டுகள் சிக்கியது என தெரியவந்தது. இதுதொடர்பாக வங்காளதேசத்தை சேர்ந்த ஷாம்சுல் ஹாக் (வயது 46), முகமத் புல் புல் அகமத் (வயது 42), முகமத் கைருல் இஸ்லாம் (வயது 38), ஷாகீன் அக்தார் (வயது 30) மற்றும் அலாம்கிர் ஹூசைன் கைது செய்யப்பட்டனர். 

டாக்காவின் முகமத்பூர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வங்காள தேச எல்லையில் நூர் முகமத் மற்றும் ஜமால்  ஆகியோரால் இந்தியாவிற்குள் அனுப்பட்டது தெரியவந்து உள்ளது.

புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கலாம் என தேசிய புலனாய்வு பிரிவு சந்தேகிக்கிறது. சட்டவிரோதமாக இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்க கூடும் என சந்தேகமானது வலுத்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய அறிக்கை கிடைக்கப்பெற்று உள்ளதாக ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.

வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், பாகிஸ்தானை சேர்ந்த டேனிஷ் என்பவருக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. வங்காளதேசத்தில் உள்ளவர்களுக்கு போலி ரூபாய் நோட்டுகளை டேனிஷ் தான் வழங்கியதாக தெரிகிறது. வங்காளதேசத்தை சேர்ந்த ஷாம்சுல் ஹாக், பாகிஸ்தானின் டேனிஷ் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே கடந்த 8 வருடங்களாக போலி இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் மற்றும் மாற்றுவது தொடர்பான பணியில் தொடர்பு இருந்து உள்ளது.

சிக்கியவர்களை விசாரணை செய்தபோது, புதிய ரூபாய் நோட்டுகளில் இணைக்கப்பட்டு உள்ள புதிய பாதுகாப்பு உள்ளீடுகளை அவர்களால் எதிர்க்கொள்ள முடியவில்லை எனவும் தெரியவந்து உள்ளது என அதிகாரிகள் கூறிஉள்ளனர். இவ்விவகாரத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம், டாக்கா விசாரணை அதிகாரிகளிடம் கூடுதல் தகவல்களை கேட்டு உள்ளோம் எனவும் தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்து உள்ளது. கடந்த வருடம் மும்பையில் மொகத் சோபுஜி மோத்தூர் என்பவரை போலீஸ் போலி ரூபாய் நோட்டுகளும் பிடித்தது, அவருக்கும் இந்த கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என கருத்தப்பட்டது.

 இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையும் தேசிய புலனாய்வு பிரிவிடம் கொடுக்கப்பட்டது. 


Next Story