உஸ்மா இந்தியா திரும்ப இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அனுமதி, பாதுகாப்பை உறுதிசெய்ய பாகிஸ்தானுக்கு உத்தரவு


உஸ்மா இந்தியா திரும்ப இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அனுமதி, பாதுகாப்பை உறுதிசெய்ய பாகிஸ்தானுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2017 6:39 AM GMT (Updated: 2017-05-24T12:09:26+05:30)

உஸ்மா இந்தியா திரும்ப அனுமதி வழங்கிய இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு, அவருடைய பாதுகாப்பை உறுதிசெய்ய பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இஸ்லாமாபாத்,


டெல்லியை சேர்ந்த இளம் பெண் டாக்டர் உஸ்மா (வயது 20), பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்த தாகிர் அலியை மலேசியா சென்றபோது காதலித்தார். இதையடுத்து, கடந்த 1–ந் தேதி, உஸ்மா, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு 3–ந் தேதி, தாகிர் அலிக்கும், அவருக்கும் திருமணம் நடந்தது. இதனையடுத்து இந்திய தூதரகத்தை நாடிய உஸ்மா தன்னுடைய நிலை குறித்து எடுத்துரைத்து, இந்தியாவிற்கு செல்ல விரும்புவதாக கூறினார். உடனே, தாகிர் அலி, போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விளக்கம் கேட்டபோது, உஸ்மா இந்தியாவுக்கு திரும்பி செல்ல விரும்புவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.

தாகிர் அலிக்கு எதிராக இஸ்லாமாபாத் கோர்ட்டில் உஸ்மா புகார் மனு கொடுத்தார். மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் வாக்குமூலமும் அளிக்கையில், நான் தாகிர் அலியை திருமணம் செய்வதற்காக, பாகிஸ்தானுக்கு வரவில்லை. அவரும், நானும் நண்பர்கள். அவரையும், பாகிஸ்தானையும் பார்ப்பதற்காகவே விசா எடுத்து வந்தேன். ஆனால், தாகிர் அலியும், அவருடைய நண்பர்களும் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினர். சித்ரவதை செய்தனர். அதனால் வலுக்கட்டாயமாக இந்த திருமணம் நடந்தது. 

திருமணத்துக்கு பிறகு தாகிர் அலி என்னை கற்பழித்தார். எனது பயண ஆவணங்களையும் பறித்துக்கொண்டனர். மேலும், தாகிர் அலி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், 4 குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரிய வந்தது. அவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்றும், மலேசியாவில் தொழிலாளியாக வேலை பார்த்தவர் என்றும் தெரிந்துகொண்டேன். அவற்றையெல்லாம் அவர் என்னிடம் மறைத்து விட்டார். அவருடைய குடும்பத்தினர் பேசும் மொழியையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி டெல்லியில் உள்ள என் சகோதரரிடம் கூறியபோது, அவர் இந்திய தூதரகத்தை அணுகுமாறு கூறினார். 

இந்திய தூதரக அதிகாரி அத்னன் என்பவரிடமும் பேசி உஷார்படுத்தினார். 

அதன்படி, நான் இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தேன். நான் இந்தியாவுக்கு பத்திரமாக திரும்பிச் செல்ல வேண்டும். அதற்கு உத்தரவாதம் அளித்தால்தான், தூதரகத்தில் இருந்து வெளியேறுவேன் என்று கூறியிருந்தார், உஸ்மாவின் மனு அடிப்படையில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. உஸ்மாவை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்போவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது. ஆனால் “ இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது, எனவே சட்டப்பூர்மான நடவடிக்கை முடிவும் வரையில் அவர் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாது,” என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கூறியது. இதுதொடர்பான வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நடந்தது.

இருதரப்பும் பதிலை தாக்கல் செய்தது. தாகிர் அலி தரப்பில் உஸ்மாவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் உஸ்மா மறுப்பு தெரிவித்து இருந்தார். இதனை காரணம் காட்டி உஸ்மா, உங்களை சந்திக்க வலுக்கட்டாய படுத்த முடியாது என ஐகோர்ட்டு அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. உஸ்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் இந்தியாவிற்கு திரும்ப உதவி செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது, இதனை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டு அவர் இந்தியா திரும்ப அனுமதி அளித்தது, அவர் வாகா எல்லையை அடையும் வரையில் பாகிஸ்தான் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

Next Story