இந்திய எல்லையில் மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் இல்லை - சீன வெளியுறவுத்துறை


இந்திய எல்லையில் மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் இல்லை - சீன வெளியுறவுத்துறை
x
தினத்தந்தி 24 May 2017 8:00 AM GMT (Updated: 24 May 2017 8:00 AM GMT)

இந்திய எல்லையில் மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் இல்லை என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பெய்ஜிங்,

அசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய்–30 ரக போர் விமானத்தில் 2 விமானிகள் நேற்று காலை 10.30 மணிக்கு வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டனர். தேஜ்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் துபியா என்ற இடத்தில் பறந்தபோது, திடீரென ரேடாரின் தொடர்பை விமானம் இழந்தது. ரேடாரின் தொடர்பை இழந்த இடம் ஏற்கனவே அதிக சர்ச்சைக்கு உள்ளான சீன எல்லையாகும். மாயமான விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு ஏதும் காரணமாக தரை இறக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து விமானப்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

சீன எல்லைக்கோட்டிற்கு அருகில் சீனாவின் விமானப்படை தளமும் இருப்பதால், அந்நாட்டு ரேடார் சிக்னல்களால் விமானம் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாயமான போர் விமானம் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. 2 என்ஜின்களுடன் அதிவேகமாக பறக்கும் திறன் கொண்ட சுகோய்–30 ரக போர் விமானம் கடந்த 1990–ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது.  கடந்த 27 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த போர் விமானங்களில் இதுவரை 6 விபத்துக்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அதுவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் விபத்துகள் நடந்ததாக கூறப்படுகிறது

இப்போது மோசமான வானிலை நிலவியதே விமானம் மாயமானதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய எல்லையில் மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் இல்லை என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே மோசமான வானிலையானது தொடர்ந்து நீடிப்பதால் விமானத்தை தேடும் பணியானது இந்திய தரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story