சீனாவுடன் ஒப்பிட்டு அமெரிக்காவை புகழ்ந்த சீன மாணவி மன்னிப்பு கேட்டார்


சீனாவுடன் ஒப்பிட்டு அமெரிக்காவை புகழ்ந்த சீன மாணவி மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 24 May 2017 11:00 AM GMT (Updated: 24 May 2017 11:00 AM GMT)

அமெரிக்க பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாvil அமெரிக்காவை புகழ்ந்து பேசிய சீன மாணவி, சமூகவலைத்தளங்களில் வெளியான எதிர்ப்புகளுக்கு பிறகு மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய சீன மாணவியான யாங் சூபிங், சீனாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் அந்நாட்டில் சுதந்திர பேச்சுரிமைக்கு எதிராக நிலவும் கட்டுப்பாடுகளை அமெரிக்காவில் நிலவும் சூழலுடன் ஒப்பிட்டு பேசினார்.

விழாவில் பேசிய மாணவி மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவி யாங், சீனாவில் காற்று மாசுபாட்டை சமாளிக்க முகமூடி அணிய வேண்டியிருக்கிறது; ஆனால் இதற்கு மாறாக, அமெரிக்காவில் இனிய மற்றும் ஆரோக்கியமான காற்று வீசுவதாக தெரிவித்தார்.

யு டியூப் வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில்  ''அமெரிக்க விமான நிலையத்துக்கு வெளியே வீசிய காற்றை சுவாசிக்கும் போதும், உள்ளிழுத்த காற்றை வெளியேற்றும் தருணத்திலும், சுதந்திரமாகவும், இதமாகவும் நான் உணர்ந்தேன்'' என்று தெரிவித்தார்.

மேலும், இது குறித்து யாங் கூறுகையில், ''இனி நான் அனுபவிக்கப் போகும் இந்த புதிய, இதமான காற்றுக்கு நான் என்றென்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். இங்கு பேச்சுரிமைக்கு சுதந்திரம் உள்ளது. ஜனநாயகம் மற்றும் பேச்சுரிமை ஆகியவை எளிதாக வழங்கப்படாது. இவற்றை பெறுவதற்கு போராட்டங்கள் நடத்துவது மதிப்பு மற்றும் அர்த்தம் மிகுந்தவை'' என்று குறிப்பிட்டார்.

இதனால் சினமடைந்த சீன சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள், தனது தாய் நாட்டை மாணவி யாங் இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, இம்மாணவி இனி அமெரிக்காவிலேயே தங்கி கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

ஆனால், மாணவியின் மாறுபட்ட கருத்தை கேட்பது அவசியம் என்று தெரிவித்த மேரிலாண்ட் பல்கலைக்கழகம், சீன மாணவிக்கு தனது ஆதரவை தெரித்தது.

சீன இணையத்தளத்தில் முக்கியமான தலைப்புகளில் ஒன்றாக யாங்கின் உரை அமைந்துவிட்டது. செவ்வாய்க்கிழமையுடன் இது குறித்த பதிவுகள் 50 மில்லியன் தடவைகளுக்கு மேலாக பார்க்கப்பட்டுள்ளன.

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சீன மாணவர்கள் உள்பட இதனால் ஆத்திரமடைந்த சீன சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள் , யாங் பொய்யான செய்திகளை வெளியிட்டதாக குற்றம்சாட்டி, அவருக்கு பதிலடி தரும் வகையில் பல காணொளிகளை யு டியூப் வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Next Story