அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் இந்திய வம்சாவளி, நீதிபதியாக நியமனம் செனட் சபை ஒப்புதல் அளித்தது


அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் இந்திய வம்சாவளி, நீதிபதியாக நியமனம் செனட் சபை ஒப்புதல் அளித்தது
x
தினத்தந்தி 26 May 2017 9:45 PM GMT (Updated: 26 May 2017 8:18 PM GMT)

அமெரிக்காவில் கென்டகி கிழக்கு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்து வருபவர் அமுல் தாபர் (வயது 48). இந்திய வம்சாவளி.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கென்டகி கிழக்கு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்து வருபவர் அமுல் தாபர் (வயது 48). இந்திய வம்சாவளி. இவரை கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமெரிக்காவின் 6-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான ஓட்டெடுப்பு, அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் ஒப்புதல் கிடைத்து விட்டது. அமுல் தாபரின் நியமனத்துக்கு ஆதரவாக 52 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக 44 ஓட்டுகளே கிடைத்தன.

இது தொடர்பாக செனட் சபை மெஜாரிட்டி தலைவர் (ஆளுங்கட்சி தலைவர்) மிட்ச் மெக்கன்னல் கூறும்போது, “அமெரிக்காவின் 6-வது அப்பீல் கோர்ட்டில் அமுல் தாபர் மிகச்சிறந்த நீதிபதியாக செயல்படுவார்” என்று குறிப்பிட்டார்.

இந்த கோர்ட்டில் டிரம்பால் நியமிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி நீதிபதி அமுல் தாபர்; இரண்டாவது தெற்காசிய நீதிபதி என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.

இவர் அங்கு டெட்ராய்ட் நகரில் பிறந்து, பாஸ்டன் கல்லூரியில் அறிவியல் பட்டமும், பெர்க்லி சட்டக்கல்லூரியில் சட்டப்பட்டமும் பெற்றவர். 2007-ம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ்தான் இவரை கென்டகி மாவட்ட நீதிபதியாக நியமித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

அமுல் தாபர் பதவி ஏற்கக்கூடிய 6-வது அப்பீல் கோர்ட்டு, கென்டகி, டென்னிசி, ஓஹியோ, மிச்சிகன் மாகாணத்தில் இருந்து வருகிற அப்பீல் வழக்குகளை விசாரிக்கும்.

Next Story