அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம்: டிரம்ப் மருமகனிடம் விசாரணையா?


அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம்: டிரம்ப் மருமகனிடம் விசாரணையா?
x
தினத்தந்தி 26 May 2017 10:45 PM GMT (Updated: 26 May 2017 8:21 PM GMT)

அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்பு பரிசீலித்து வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் சற்றும் எதிர்பாராத விதத்தில் தோல்வியை தழுவினார். அவரைத் தோற்கடித்து, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பை வெற்றி பெறச்செய்ததில் ரஷியாவின் பங்களிப்பு உண்டு என அங்கு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) விசாரணை நடத்தி வருகிறது. பாராளுமன்றமும் இந்த குற்றச்சாட்டை ஆராய்ந்து வருகிறது. ஆனால் ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க தேர்தலில் ரஷியா உள்ளிட்ட எந்தவொரு நாடும் தலையிடவில்லை என்று திட்ட வட்டமாக மறுத்து வருகிறார்.

டிரம்ப் மருமகன்

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிற மத்திய புலனாய்வு அமைப்பு, ஜனாதிபதி தேர்தலை டிரம்புக்கு சாதகமாக திருப்ப ரஷியா முயற்சித்ததாக நம்புகிறது.

இந்த நிலையில், ரஷிய தலையீட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னருக்கு (இவர் டிரம்பின் மகள் இவான்காவின் கணவர்) பங்களிப்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக அவரிடம் இது தொடர்பான தகவல்கள் இருக்கும் என்று மத்திய புலனாய்வு அமைப்பினர் கருதுகின்றனர். எனவே அவரிடம் விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு, “கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் செர்கெய் கிஸில்யாக், மாஸ்கோ வங்கியாளர் செர்கெய் கார்கோவ் ஆகியோரை ஜேரட் குஷ்னர் சந்தித்து பேசியது குறித்து மத்திய புலனாய்வு அமைப்பினர் தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர்” என கூறி உள்ளது.

கார்கோவிடம் பேசியது என்ன?

ரஷியா, உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்காகவும், கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தால், பொருளாதார தடை விதிக்கப்பட்ட வனேஷெகனம் வங்கியின் தலைவர்தான் இந்த செர்கொய் கார்கோவ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கி ரஷிய பிரதமர் மெத்வடேவின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகும். அதே நேரத்தில் செர்கெய் கார்கோவிடம் அமெரிக்க பொருளாதார தடை குறித்து தான் எதுவும் பேசவில்லை என்று ஜேரட் குஷ்னர் கூறி உள்ளார்.

ஒத்துழைப்பு

ஜேரட் குஷ்னர், எந்தவொரு விசாரணைக்கும் தனது ஒத்துழைப்பை அளிப்பார் என்று அவரது வக்கீல் ஜேமி கோர்லிக் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தனது ரஷிய தொடர்புகள் குறித்து பாராளுமன்ற செனட் சபையின் உளவுக்குழுவுடன் விவாதிப்பதற்கு தான் தயார் என்று ஜேரட் குஷ்னர் ஏற்கனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story