உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் மடிக்கணினிக்கு அமெரிக்கா தடை?


உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் மடிக்கணினிக்கு அமெரிக்கா தடை?
x
தினத்தந்தி 28 May 2017 6:54 PM GMT (Updated: 28 May 2017 6:54 PM GMT)

விமானங்களில் மடிக்கணினி எடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா தடை விதிக்கும் என்று உள்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி தெரிவித்தார்.

வாஷிங்டன்

தொலைக்காட்சி ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது அவர், பாதுகாப்பு அளவு உயர்த்தப்படும் என்றும் அதே போல கைப்பைகளுக்கான சோதனையும் அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். 

தீவிரவாதிகள் அமெரிக்க விமானம் ஒன்றை அதிலும் குறிப்பாக அமெரிக்க மக்கள் நிறைந்துள்ள விமானத்தைத் தகர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார் கெல்லி.

மார்ச் மாதம் விமான ஓட்டிகளின் அறைகளில் மடிக்கணினி எடுத்து வர குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் துருக்கி ஆகியவற்றின் 10 விமானநிலையங்களிலிருந்து மடிக்கணினி எடுத்துவர அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. நவீன ரக அபாயம் ஒன்று அச்சுறுத்தி வருவதால் இந்தக் கட்டுப்பாடுகள் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் எப்போதிருந்து புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்பதற்கு தேதி எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

”உளவுத்துறை அளித்துவரும் தகவல்களை அடுத்தே பாதுகாப்பு அளவு உயர்த்தப்படுவதாகவும் கெல்லி கூறினார். ஏற்கனவே பல விமான நிலையங்களில் கைப்பைகளை சோதிப்பது நடைமுறையில் இருக்கிறது. அதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டம் உண்டா என்ற கேள்விக்கு, “ அரசு அவ்வாறு செய்யும் வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடுமையான கட்டுப்பாடுகளால் ‘சிலர்’ வீட்டை விட்டு வெளியே வரவே சிந்திப்பார்கள் எனவும் அவர் மறைமுகமாக தீவிரவாதிகளை குறிப்பிட்டு பேசினார்.


Next Story