ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு


ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு
x
தினத்தந்தி 31 May 2017 9:52 AM GMT (Updated: 31 May 2017 9:52 AM GMT)

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காபூல்,

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அண்டை நாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பாதுகாப்பு அதிகம் உள்ள பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு இந்திய தூதரகத்தின் அருகில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பில், இந்திய தூதரக கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் தூதரகத்திற்குள் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் நடைபெற்றுள்ள பகுதியில் தான் ஜனாதிபதி மாளிகை மற்றும் வெளிநாட்டு தூதர்களின் வீடுகளும், உள்ளன. இதனால் அங்கிருந்த வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் நொறுங்கி சேதம் அடைந்தன.

இந்த கோர தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், தற்போதைய நிலைப்படி பலியானவர்களின் என்ணிக்கை 80  ஆக அதிகரித்திருக்கலாம் என அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். குண்டு வெடித்த பகுதி முழுவதும் ரோடுகள் மூடப்பட்டன. ஏராளமான கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இத்தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.  

பிரதமர் மோடி கண்டனம்

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆப்கானிஸ்தானின் போராட்டத்திற்கு இந்தியா துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story